ரூ.1.5 கோடி நஷ்டஈடு – விவாகரத்திற்கு ‘ஓகே’ சொன்ன மனைவி!

போபால்: மத்தியப் பிரதேச மாநிலத்தில், தன் கணவரிடம் ரூ.1.5 கோடியைப் பெற்றுக்கொண்டு, அவருக்கு விவாகரத்து கொடுப்பதற்கு சம்மதம் தெரிவித்துள்ளார் பெண் ஒருவர்.

இந்தக் கதை, அம்மாநில தலைநகர் போபாலைச் சேர்ந்தது.

மத்திய பிரதேசம் மாநிலம் போபாலில் உள்ள குடும்ப நீதிமன்றத்தில் சிறுமி ஒருவர் வினோதமான வழக்கை தொடுத்தார். அதாவது, தனது தந்தை, அவருடன் பணிபுரியும் பெண் ஊழியர் ஒருவருடன் முறையற்ற உறவு வைத்துள்ளதாகவும், இதனால், தங்களது பெற்றோர்களுக்கிடையே அடிக்கடி சண்டை ஏற்படுவதாகவும், இந்தப் பிரச்சினை காரணமாக, தனக்கும் தன் தங்கையின் படிப்பிற்கும் இடையூறு ஏற்படுவதாக குற்றம் சாட்டி வழக்கு தொடரந்தார் அவர்.

இதனையடுத்து, நீதிமன்றத்தில் ஆஜரான தம்பதியினருக்கு கவுன்சிலிங் வழங்க உத்தரவிடப்பட்டது. கவுன்சிலிங்கில் தனது மனைவியை விவாகரத்து செய்து, கள்ளத் தொடர்பில் இருந்த பெண் ஊழியருடன் வாழ அந்தக் கணவர் விரும்பினார். ஆனால், விவாகரத்திற்கு மனைவி சம்மதிக்கவில்லை.

பலகட்ட கவுன்சிலிங்கிற்கு பிறகு இருவரும் ஒரு வினோதமான ஒப்பந்தத்திற்கு சம்மதித்தனர். அதன்படி, தனது மகள்களின் எதிர்காலத்தை கருத்தில்கொண்டு ஒன்றரை கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து மற்றும் ரொக்கம் கொடுத்தால் விவாகரத்திற்கு ஒப்புக்கொள்வதாக மனைவி தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம், தற்போது போபாலில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.