முகநூல் மூலம் விபரீத நட்பு: கணவரை கத்தியால் குத்திய மனைவி கைது

சென்னையில் முகநூல் மூலம் ஏற்பட்ட விபரீத நட்பால்  கணவரை கத்தியால் குத்திய மனைவி மற்றும் கல்லூரி மாணவர் உட்பட மூவர் கைது செய்யப்பட்டனர்.

சென்னை புரசைவாக்கம், பெருமாள் தெருவைச் சேர்ந்தவர் கிஷோர் கோத்தாரி (வயது 40). இவர் வேப்பேரியில் உள்ள நிதி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி பெயர் சீமா( வயது 28). சீமாவோடு அவரது தங்கை பேபியும் (வயது 18) தங்கி இருந்தார்.

வழக்கமாக தினமும் காலை 10 மணிக்கு வேலைக்கு சென்றுவிடும் கிஷோர் கோத்தாரி   முன் தினமும் அதுபோல் சென்றார். ஆனால்  திடீரென காலை 11 மணி அளவில் வீட்டுக்கு வந்தார். நீண்ட நேரம் அவர் கதவை தட்டியும், கதவு திறக்கப்படவில்லை. பிறகு அவரது மனைவி  சீமா வந்து கதவை திறந்தார்.

வீட்டுக்குள் வந்த கிஷோர் கோத்தாரி ,படுக்கை அறைக்கு சென்றார். அங்கு அவரது மனைவியின் தங்கை பேபி நின்று கொண்டிருந்தார். படுக்கை அறையை ஒட்டி உள்ள குளியல் அறைக்குள்   இளைஞர் ஒருவர் பதுங்கி இருந்ததை கிஷோர் பார்த்தார்.

அவரை மடக்கிப் பிடித்த கிஷோர்,  யாரென கேட்டு அவருடன் சண்டையிட்டார். அந்த  இளைஞர் தனது உறவினர் என்றும், ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து வந்துள்ளதாகவும், கணவரிடம் சீமா கூறினார்.

ஆனால் அதை நம்பாத கிஷோர்,  தனது தம்பிக்கு தகவல் கொடுத்து வீட்டுக்கு வரவழைத்தார். இந்த நேரத்தில் அவர்களுக்குள் அடி-தடி மோதல் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் காய்கறி வெட்டும் கத்தியால், கிஷோர் குத்தப்பட்டார். இதை தடுத்த அவரது தம்பிக்கும் கத்திக்குத்து விழுந்தது. சீமா, கத்தியால் குத்தியதாக தெரிகிறது. இது குறித்து உடனடியாக கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது.

கீழ்ப்பாக்கம் காவல் ஆய்வாளர் பாலன் காவலர்களுடன் வந்து  விசாரணை நடத்தினார். கத்திக்குத்தில் காயம் அடைந்த கிஷோர், அவரது தம்பி இருவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

வீட்டு குளியலறையில் பதுங்கி இருந்த மர்ம இளைஞரை காவல்துறையினர் விசாரித்தானர். அவர் பெயர் ரவிபிரகாஷ் (வயது 20) என்பதும்,  கல்லூரி மாணவரான இவருடன், சீமாவும், அவரது தங்கை பேபியும் முகநூல் மூலம் அறிமுகமாக பிறகு முகநூலிலேயே அந்த இளைஞருடன் காதல் சாட்டிங்கில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

ராஜஸ்தானை சேர்ந்த ரவிபிரகாஷை சென்னைக்கு வரவழைத்துள்ளனர். கணவர் கிஷோர் வேலைக்கு சென்ற நேரத்தில் ரவிபிரகாஷை வீட்டுக்கு அழைத்து அக்கா, தங்கை இருவரும் நெருங்கிப்பழகியிருக்கிறார்கள்.

மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்த  கிஷோர் திடீரென வீட்டுக்கு வந்தபோது உண்மை வெளிப்பட்டு மோதலில் முடிந்திருக்கிறது.

இந்த சம்பவம் தொடர்பாக கீழ்ப்பாக்கம்  காவல் நிலையத்தில் வழக்கு பதியப்பட்டு விசாரணை நடந்துவருகிறது.  கணவரையும், அவரது தம்பியையும் கத்தியால் குத்தியதாக சீமாவும், அவரது தங்கை பேபியும், வீட்டுக்குள் நுழைந்த இளைஞர் ரவி பிரகாசும் கைது செய்யப்பட்டனர்.