டாக்டர் சர்ட்டிபிகேட்டோடு வந்தால்தான்… கணவனுக்கு கண்டிஷன் போட்ட மனைவி..

’கொரோனா இல்லை என்று டாக்டர் சர்டிபிகேட் வாங்கி வந்தால் தான் வீட்டுக்குள் விடுவேன்’’ என்று பிடிவாதம் காட்டிய மனைவி தான் இன்று ஆந்திராவின்,’தலைப்பு செய்தி’.

நெல்லூர் மாவட்டத்தில் உள்ள வெங்கட்கிரி என்ற கிராமத்தைச் சேர்ந்த இளைஞர், நெல்லூர் நகரில் நகைக்கடை ஒன்றில் வேலை பார்த்து வந்தார்.

தினமும் வேலை முடிந்து வீட்டுக்கு வரும் அவர்,  ஊரடங்கு காரணமாக சில நாட்கள் ஊருக்கு வரவில்லை.

மனைவி துடித்துப்போனாள்.

 நெல்லூரில் கொரோனாவின் தாக்கம் கூடுதலாக இருந்ததே , அதற்குக் காரணம்.

இரண்டு பேர் அங்கு உயிர் இழந்த நிலையில், 64 பேரை வைரஸ் பாதித்திருந்தது.

ஏதோ வாகனம் பிடித்து அந்த நகைக்கடை ஊழியர் பல சிரமங்களுக்கு மத்தியில் நேற்று வீட்டுக்கு வந்துள்ளார்.

அவருக்கு வீட்டில் பேரதிர்ச்சி காத்திருந்தது.

’’ கொரோனா கோரத்தாண்டவம் ஆடிய ஊரில் இருந்து வந்துள்ளீர்கள்.எனவே, உங்களுக்கு  கொரோனா தொற்று  இல்லை என்று டாக்டரிடம் சர்டிபிகேட் வாங்கி வந்தால் மட்டுமே வீட்டுக்குள் அனுமதிப்பேன்’’ என்று கூறி,கதவைச்  சாத்தி விட்டாள், அவர் மனைவி.

இப்படி ஒரு வரவேற்பை அவர் எதிர்பார்க்கவில்லை.

உள்ளூர் சுகாதார ஊழியர்கள், அவரை டாக்டரிடம் அழைத்துச் சென்றுள்ளனர்.

பரிசோதித்த டாக்டர், ‘ இவருக்கு கொரோனா தொற்று இல்லை’’ என்று சான்றிதழ் கொடுத்தார்.

அந்த சர்டிபிகேட்டை காட்டிய பிறகே கணவனை வீட்டுக்குள் சேர்த்திருக்கிறாள், மனைவி.

-ஏழுமலை வெங்கடேசன்