சிறப்புக்கட்டுரை:  அ. குமரேசன்

தயம், மூளை, நுரையீரல், சிறுநீரகம் ஆகிய அங்கங்கள் எப்படி உயிர்ப்புடன் உள்ள உடலிலிருந்து பிரிக்க முடியாதவையோ, அதே போன்று மனித உரிமைகளிலிருந்து பிரிக்க முடியாதது மகளிர் உரிமை. மாதர் உரிமையில் முக்கியமான ஒன்று அவர்களின் மத உரிமை. மத உரிமை என்றால், ஒருவர் ஒரு மதத்தைச் சார்ந்திருக்கும் உரிமை, வேறு மதத்திற்கு மாறுகிற உரிமை, எந்த மதத்தையுமே சாராதிருக்கும் உரிமை ஆகியனவும்தான். மத உரிமை பாலினப் பாகுபாடின்றி எல்லோருக்கும் உரியதுதான் என்றாலும், பெண்ணின் மத உரிமை பற்றி அழுத்தமாகக் கூற வேண்டியுள்ளது. இந்திய உச்சநீதிமன்றம் வியாழனன்று (டிசம்பர் 7) அளித்துள்ள தீர்ப்பின் மூலம் பெண்ணின் மத உரிமையை அழுத்தமாகக் கூறியிருக்கிறது.

பெண்ணுக்குத் திருமணமான பிறகு அவளுடைய மதம் எது? பொதுவாகக் காதல் திருமணங்கள் மிகக் குறைவாகவே நடக்கிற, அதுவும் மதக் கலப்புத் திருமணங்கள் மிகச் சொற்பமாகவே நடைபெறுகிற, பெரியவர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணங்களே (அரேஞ்ஜ்டு மேரேஜ்) எங்கும் பரவலாக நடத்தப்படுகிற நமது நாட்டில், இணையர் இருவருமே ஒரே மதத்தைச் சேர்ந்தவர்களாகவே இருப்பார்கள். ஆகவே அவ்வாறு மணமுடிக்கப்படும் பெண்களும் ஆண்களும் ஒரே மதத்தைச் சேர்ந்தவர்களாகவே இருப்பார்கள். இங்கே பெண்ணின் மதம் எது என்ற கேள்வி எழுவதில்லை. இரு வேறு மதங்களைச் சேர்ந்த இருவர் மணமேடையில் இணைகிறார்கள் என்றால்தான் இந்தக் கேள்வி எழுகிறது.

திருமணத்திற்குப் பிறகு கணவன் எந்த மதமோ அந்த மதம்தான் மனைவிக்கும் என்பதே இயற்றப்படாத சட்டமாக, எழுதப்படாத விதியாக நடைமுறையில் இருந்துவருகிறது. திருமணத்திற்குப் பிறகு ஆணின் மதம் எது என்ற கேள்வி எழுப்பப்படுவதே இல்லை. ஆணாதிக்க சமுதாயம்தான் இது என்பது அப்பட்டமாக வெளிப்படும் இடம் இது. மதத்தையும் மதம் சார்ந்த மரபுகளையும் அதில் மகளிருக்கான நியதிகளையும் உருவாக்கியவர்கள் ஆண்களே என்பது மெய்ப்பிக்கப்படுகிற இடமாகவும் இது இருக்கிறது.

மதக் கலப்புத் திருமணங்கள் ஆகப்பெரும்பாலும் காதல் மணங்களாகவே இருக்கும். மிக அரிதாக, தொடரும் ரத்த உறவு என்ற அடிப்படையில் ஒரு மதத்தைச் சேர்ந்த குடும்பத்தின் பெண்ணுக்கோ ஆணுக்கோ, வேறு மதத்தைச் சேர்ந்த அல்லது வேறு மதத்திற்கு மாறிய குடும்பத்தைச் சேர்ந்த ஆணுடனோ பெண்ணுடனோ பெரியவர்களால் நிச்சயிக்கப்பட்டதன் அடிப்படையில் திருமணம் நடக்கிறது. காதல் திருமணங்களில், “என் மதத்தை நான் பின்பற்றிக்கொள்கிறேன், உன் மதத்தை நீ பின்பற்றிக்கொள்,” என்று இருவரும் மனமொத்து உடன்படுவதற்கும், அவரவர் நம்புகிற மதத்தைப் பின்பற்றுவதற்குமான வாய்ப்பு சற்று கூடுதலாக இருக்கிறது. ஆயினும் இவ்வாறு நாகரிகமாக உடன்பாடு செய்துகொண்டு அதைக் கடைப்பிடிக்கிற இணைகளின் எண்ணிக்கை குறைவுதான்.

மதம் மட்டுமல்ல, இந்திய மண்ணுக்கே உரிய தனித்துவமான பிரிவினை ஏற்பாடாகிய சாதி அடையாளமும் இதே போன்றதுதான். மதத்தைப் பொறுத்தவரையிலாவது, அவரவர் மத அடையாளத்தோடு இணைந்து வாழ்வதற்கான வாய்ப்பு, அதாவது “நான் என் சாமியைக் கும்பிட்டுக்கொள்கிறேன், நீ உன் சாமியைக் கும்பிட்டுக்கொள்,” என்று இருவரும் ஒப்புக்கொண்டு வாழ்வதற்கான சூழல்  ஓரளவுக்கேனும் இருக்கிறது. சாதி என்று வருகிறபோது அந்தப் பேச்சுக்கே இடமில்லை. சாதி வரப்புகளைத் தாண்டி ஓடுகிற காதல் இணையரின் கால்கள், சாதி மறுப்பு என்ற சுதந்திரமான வெளியை அடையலாம். “எனக்கும் இனி சாதியில்லை, உனக்கும் சாதியில்லை,” என்ற மேன்மையான இடத்தை அடையலாம். ஆனால், “நான் என் சாதி அடையாளத்தோடு இருந்துகொள்கிறேன், நீ உன் சாதி அடையாளத்தோடு இருந்துகொள்,” என்று இருந்துவிட முடியாது. மனதளவில் அப்படி இருக்க விரும்பலாம், ஆனால் நடைமுறையில்?

நடைமுறையில், கணவனின் சாதியோடு கரைந்துபோக வேண்டியள்தான் மனைவி. சிற்சில பழக்கங்களை வேண்டுமானால் அவள் தனிப்பட்ட முறையில் தொடரலாம் – அதுவும், கணவனின் குடும்பத்தார் எந்த அளவுக்கு நவீன சிந்தனையும் ஜனநாயக உணர்வும் உள்ளவர்களாக இருக்கிறார்கள் என்பதைப் பொறுத்து.

எனது நண்பன் ஒருவனின் சகோதரி வேறு சாதியைச் சேர்ந்தவனைக் காதலித்தாள். பெற்றோரின் எதிர்ப்பை மீறி, அந்தச் சகோதரன் உள்ளிட்ட நண்பர்களின் உதவியோடு திருமணம் நடந்தது. காலப்போக்கில் பெற்றோர் மனம் மாறிவிட்டார்கள். அதே வேளையில், கொஞ்சம் கொஞ்சமாக அவளது சாதி அடையாளங்களும் மாறின. கணவனின் குடும்பத்தாரோடும் உறவினர்களோடும்தான் பெருமளவுக்குத் தொடர்புகள் என்பதால், அவர்களே அவளைச் சூழ்ந்திருக்கிறார்கள் என்பதால், அவர்களுடைய சாதி நடைமுறைகள் அவளையும் தொற்றிக்கொண்டன. வீட்டில் நடைபெறும் வழிபாடுகள் முதல், குழந்தைகளுக்குப் பெயர் சூட்டுதல், பெண் குழந்தை வயதுக்கு வந்ததை ஒரு விழாவாகக் கொண்டாடுதல் என எல்லாச் சடங்குகளின்போதும், “நம்ம வழக்கப்படி இதை இப்படிச் செய்ய வேண்டும், அதை அப்படிச் செய்ய வேண்டம்,” என அவளுக்குச் சொல்லித் தருவதற்கு கணவனின் உறவினர்கள் வந்துகொண்டே இருந்தார்கள். பள்ளியில் குழந்தைகளின் சாதியைப் பதிவு செய்தபோது கணவனின் சாதிதான் குறிப்பிடப்பட்டது. காதல் மணம் செய்துகொண்ட இருவரும் தங்கள் பிள்ளைகளுக்கு ‘அரேஞ்ஜ்டு மேரேஜ்’ செய்துவைத்தார்கள் – கணவனின் சாதியிலேயே வரன் பார்த்து முடிவு செய்தார்கள்.

சமூகக் களம் இப்படித்தான் இருக்கிறது என்ற நிலையில்தான், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகிறது. பார்ஸி மதத்தைச் சேர்ந்த குடும்பத்தில் பிறந்த பெண் கூல்ரோக் எம். குப்தா. அவர் இந்து மதத்தைச் சேர்ந்தவரைக் காதலித்துத் திருமணம் செய்துகொண்டார். அவர்களது திருமணம் சிறப்புத் திருமணச் சட்டத்தின் கீழ் நடைபெற்றது. அவரது தந்தை கடந்த சில ஆண்டுகளாக உடல் நலிவுற்ற நிலையில் இருக்கிறார். அவர் மரணமடைகிறபோது, பார்ஸிகள் வழக்கப்படியான இறுதிச் சடங்குகளில் தாமும் பங்கேற்க அனுமதி கோரினார் கூல்ரோக். பார்ஸி மக்களின் பூர்வீக மதமும்,  உலகின் பழமையான மதங்களில் ஒன்றுமான ஜோராஸ்ட்ரியம் என்ற பிரிவின் மரபுப்படி, இறந்தவர் உடல், இயற்கையாக அழுகி மக்கிப் போகும் வகையில் சூரியனுக்குப் படைக்கப்பட்டு, கழுகுகளுக்கு இரையாக்கப்படும். அதற்காக ஒரு உயரமான கட்டடத்தின் உ.ச்சியில் வைக்கப்படும். ‘அமைதிக் கோபுரம்’ என்ற அந்தக் கட்டடத்திற்கு வந்து அஞ்சலி செலுத்துவதற்கு அனுமதியளிக்கக் கேட்டுக்கொண்டார்.

‘வல்சாத் பார்ஸி டிரஸ்ட்’ என்ற பார்ஸி சமய அமைப்பினர், கூல்ரோக் வேறு மதத்து ஆணை மணந்துகொண்டதால் அவர் கணவனின் மதத்தைச் சேர்ந்தவராகிறார் எனக்கூறி, வேறு மதத்தவருக்கு ஒரு பார்ஸியின் இறுதிச் சடங்கில் பங்கேற்க அனுமதியில்லை என்று கூறிவிட்டது. அதை எதிர்த்து அவர் 2010ல் தாக்கல் செய்த மனுவை, குஜராத் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்து ஆணை மணந்ததால் இயல்பாக அவரும் இந்துவாகிவிட்டார், அவருக்கு அமைதிக் கோபுரத்திற்குச் செல்லும் தகுதி இல்லை என்பது உயர்நீதிமன்றத் தீர்ப்பின் சாரம். அதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தை மேல்முறையீட்டு மனுவின் மூலம் நாடினார் கூல்ரோக்.

தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.கே. சிக்ரி, ஏ.எம். கான்வில்க்கர், டி.ஒய். சந்திரசூட். அசோக் பூஷன் ஆகியோர் கொண்ட அமர்வு, உயர்நீதிமன்றத் தீர்ப்பை ஏற்க மறுத்து, திருமணத்தால் பெண்ணின் மதம் மாறிவிடாது என்று அறிவித்திருக்கிறது. தனது மதம் இது என முடிவு செய்ய வேண்டியது சம்பந்தப் பட்ட பெண்தான் என்று நிதிபதிகள் கூறியிருக்கிறார்கள். சிறப்புத் திருமணச் சட்டத்தின் கீழ் திருமணம் நடந்திருக்கிற நிலையில், பெண் கணவனின் மதத்தைச் சேர்ந்தவராகிறார் என்ற கருத்து பொருந்தாது என்றும் தெளிவுபடுத்தியிருக்கிறார்கள். பார்ஸி அறக்கட்டளை அமைப்புக்கு இதை இம்மாதம் 14ம் தேதியன்று எடுத்துக்கூறி, தந்தையின் இறுதிச்சடங்கில் கூல்ரோக் பங்கேற்க அனுமதிக்க இயலுமா என்று கேட்குமாறு, அறக்கட்டளையின் வழக்குரைஞரைப் பணித்துள்ளது உச்சநீதிமன்றம்.

மத இணைப்பு தொடர்பான பொதுச் சட்டம் என்பதாக முன்பு பிரிட்டிஷ் ஆட்சியின்போது இருந்திருக்கிறது. வேறு மதத்து ஆணை மணந்துகொள்ளும் பெண் கணவனின் மதத்தைச் சேர்ந்தவளாகவே கருதப்படுவாள் என்றது அந்தச் சட்டம். கூல்ரோக்குக்காக வாதாடிய மூத்த வழக்குரைஞர் இந்திரா ஜெய்சிங், மேற்படி பொதுச் சட்டம் உருவாக்கப்பட்ட நாட்டிலேயே அது இப்போது பின்பற்றப்படவில்லை என்கிறபோது இந்தியாவில் அதைக் கடைப்பிடிக்க முடியுமா என்று கேட்டிருக்கிறார்.

“ஒரு ஆண் தன் சமூகத்திற்கு வெளியே திருமணம் செய்துகொண்டு தன் மத அடையாளத்தைத் தக்கவைத்துக்கொள்ள முடிகிறது. ஒரு பெண் அவ்வாறு தன் சமூகத்திற்கு வெளியே திருமணம் செய்துகொண்டு தனது மத அடையாளத்தைத் தக்க வைத்துக்கொள்ள முடியவில்லை. ஒரு பெண்ணுக்கு எப்படி இவ்வாறு தடை விதிக்க முடியும்,” என்று கேள்வி எழுப்பியது உச்சநீதிமன்ற அமர்வுக்குழு.

கூல்ரோக் கோரிக்கையை அந்த அறக்கட்டளை ஏற்கப்போகிறதா இல்லையா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம். ஆனால், ஒருவர் தனக்கென ஒரு மதத்தைப் பின்பற்றுவதோ பின்பற்றாமல் இருப்பதோ அவரது சொந்த உரிமை. மதத்தை மாற்றிக்கொள்வதும் அவரது சொந்த உரிமையே. மதம் மாறியோ, மாறாமலோ திருமணம் செய்துகொள்வதும் அவருடைய சொந்த உரிமைதான். திருமணத்தின் பெயரால், கணவன் வீட்டாரும் பெண்ணைக் கட்டாயப்படுத்த முடியாது, மனைவியின் குடும்பத்தாரும் தடுக்க முடியாது. மனித உரிமையின் பிரிக்க முடியாத கூறுகளில் ஒன்றாக, பெண்ணின் இந்த உரிமையை உறுதிப்படுத்தும் இந்தத் தீர்ப்பு, குறிப்பிட்ட அறக்கட்டளைக்கு மட்டுமல்ல, நாடு முழுக்கப் பரவலாக எடுத்துரைக்கப்பட வேண்டும்.

இந்தியாவில் மதக் கலப்புத் திருமணங்கள் 2.1 விழுக்காடு அளவுக்கே நடைபெறுகின்றன என்று ஆய்வாளர்கள் குமுதின் தாஸ், கே.சி. தாஸ், டி.கே. ராய், பி.கே. திரிபாதி ஆகியோர் 2011ல் வெளியிட்ட ‘இந்தியாவில் மதக் கலப்பு மற்றும் சாதிக்கலப்புத் திருமணங்கள் நிலை’ என்ற அறிக்கை தெரிவிக்கிறது. சாதிக் கலப்புத் திருமணங்கள் 10 விழுக்காடு அளவுக்கே நடக்கின்றன என்று அந்த ஆய்வறிக்கை மேலும் தெரிவிக்கிறது. இந்தக் குறுகிய அளவிற்குள்தான் கவுரவக் கொலைகளும், உரிமை மறுப்புகளும் தாண்டவமாடுகின்றன. அந்தத் தாண்டவத்தை நிறுத்துவதில், மத அடையாளம் தொடர்பாக தற்போது இப்படியொரு சிறப்பான முடிவுக்கு வந்துள்ள நீதிமன்றம், அடுத்து சாதி அடையாளத்திற்கும் இதே போன்ற தீர்ப்பை அளிக்கும் நாள் வரட்டும். மண்ணிலிருந்து மதத்தையும் சாதியையும் களையெடுக்கப் போராடுவோர் கரங்களில் இத்தகைய தீர்ப்புகளும் அரிவாளாகச் சுழல்கிற நாளுக்காக வரலாறு காத்திருக்கிறது.