டில்லி:

டில்லியை சேர்ந்த ஒரு பெண் தன் கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது வரதட்சணை கொடுமை வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த கீழ் நீதிமன்றம், குடும்ப வன்முறை வழக்கில் தீர்ப்பு அளிக்கப்படும் வரை, அந்த பெண்ணுக்கு மாதம் 20 ஆயிரம் ரூபாய் ஜீவனாம்சம் வழங்க உத்தரவிட்டது.

இந்த தீர்ப்பை எதிர்த்து கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் கணவர் மேல் முறையீடு செய்தார். ‘‘அந்த பெண் 2006ம் ஆண்டில், வக்கீலாக பதிவு செய்தவர். பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறார்’’ என கணவர் தெரிவித்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி தீபக் கார்க், ‘‘கணவர் வீட்டில் வசிக்க இயலாத சூழ்நிலை ஏற்பட்டு வீட்டை விட்டு வெளியேறும் பெண்ணுக்கு நிதி பாதுகாப்பு ஏற்படுத்த வேண்டியது அவசியம்.

அந்த பெண்ணின் பெற்றோருக்கு சொந்தமாக வீடு இருந்தாலும் அந்த வீட்டை விட்டு வெளியேறும் சூழ்நிலை ஏற்பட்டால் தனியாக வாழ முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட வேண்டும்’’ என்றார்.

மேலும், அவர் கூறுகையில், ‘‘இந்த வழக்கில் கீழ் நீதிமன்றம் அளித்த உத்தரவு உறுதி செய்யப்படுகிறது. குடும்ப வன்முறை வழக்கு முடியும் வரை அந்த பெண்ணுக்கு மாதம் 20 ஆயிரம் ரூபாய் ஜீவனாம்சம் தர வேண்டும்’’ என்று உத்தரவிட்டார்.