ராணுவத்தில் இணையும் புல்வாமா தாக்குதலில் வீரமரணம் அடைந்த வீரரின் இளம்மனைவி

டேஹ்ராடூன்: 

புல்வாமா தாக்குதலில் வீர மரணம் அடைந்த இந்திய ராணுவ வீரரின் மனைவி, ராணுவத்தில் விரைவில் ராணுவத்தில் சேர்ந்து பணியாற்ற உள்ளார். அவரின் தைரியமான முடிவு பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

கடந்த ஆண்டு (2019)  பிப்ரவரி மாதம் 14 ஆம் தேதி காஷ்மீர் பகுதியில் உள்ள  புல்வாமாவில் நடைபெற்ற தற்கொலைப்படை தாக்குதலில் 40க்கும் மேற்பட்ட சிஆர்பிஎஃப் வீரர்கள் கொல்லப்பட்டனர்.   இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானின் ஜெய்ஷ் ஈ முகமது இயக்கம் பொறுப்பேற்றுக் கொண்டது.  இந்த இயக்கத்தை சேர்ந்த அடில் அகமது புல்வாமா தாக்குதலை நடத்தியது தெரிய வந்தது.

இந்த தாக்குதலில்  மேஜர் விபூதி ஷங்கர் தவுன்தியால் என்ற இளம் வீரர் வீர மரணம் அடைந்தார்.  விபூதி ஷங்கர் தவுன்தியால் – நிதிகா திருமணம் நடந்து வெறும் 10 மாதங்களே ஆன நிலையில்தான் இந்த சோக சம்பவம் நடைபெற்றது. அவரது இளம் மனைவி நிதிகா தவுன்தியால் (வயது 28), ராணுவத்தில் சேர்ந்து நாட்டுக்காக பணியாற்றுவேன் என தெரிவித்திருந்தார். அதன்படி, அவர்  இந்திய ராணுவத்தில் சேர்வதற்கான எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்று, நேர்முகத் தேர்விலும் கலந்துகொண்டார். தற்போது  முடிவுக்காகக் காத்திருக்கிறார். அந்த முடிவு வெளியானதும், அவரும் ஒரு இந்திய ராணுவ வீரராக விரைவில் பணியில் சேர தயாராகி வருகிறார்.

இதுகுறித்து கூறிய நிதிகா தவுன்தியால் எனது கணவர் விபூ, பலருக்கும் முன்மாதிரியாக வாழ்ந்தவர். அவரை மேலும் பெருமைப்படுத்தும் வகையில், இந்த முடிவை எடுத்தேன். எங்களது காதல் எப்போதும் மாறாது, அவரது தைரியம் பல இளைஞர்களுக்கு வழிகாட்டியாக இருந்திருக்கிறது. அதை நான் வாழும் வரை நிலைத்திருக்கச் செய்வேன் என்று தெரிவித்து உள்ளார்.

நிதிகாவின் தைரியமான முடிவுக்கு பலத்த வரவேற்பு கிடைத்துள்ளது.