பத்திரிகை ஆசிரியரை மிரட்டும் எம் பி யின் மனைவி…

ஸ்ரீநகர்

காஷ்மீரின் மக்கள் ஜனநாயக கட்சியின் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் மனைவி ஒரு பத்திரிகை ஆசிரியருக்கு மிரட்டல் விடுத்துள்ளார்.

காஷ்மீரில் முஃப்தி முகமது சையதுவால் துவங்கப்பட்டது ஜம்மு காஷ்மீர் மக்கள் ஜனநாயகக் கட்சி.   தற்போது அவர் மகள் மெகபூபா தலைமைப் பொறுப்பை வகித்து வருகிறார்.    காஷ்மீரில் உள்ள புகழ்பெற்ற பத்திரிகைகளில் ஒன்று தி காஷ்மீர் மானிட்டர்.    அந்தப் பத்திரிகை சமீபத்தில் மக்கள் ஜனநாயக கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரைப் பற்றி தலையங்கம் பதிந்திருந்தது.

அது குறித்து, அந்த உறுப்பினரின் மனைவி தொலைபேசியில் பத்திரிகை ஆசிரியர் ஷமீம் மீரஜ் என்பவருக்கு மிரட்டல் விடுத்துள்ளார்.   அந்த ஆடியோ ஜம்மு காஷ்மீர் மாநிலமெங்கும் வைரலாக பரவி வருகிறது.   சுமார் நான்கு நிமிடங்கள் உள்ள அந்த ஒலிபரப்பில்,  உறுப்பினரின் மனைவி பத்திரிகை ஆசிரியரை பதியத் தகாத வார்த்தகளால் திட்டுகிறார்.

அது தவிர, “நான் நினைத்தால் என்னென்ன நடக்கும் என்பது உனக்குத் தெரியாது.   என் கணவரை பற்றி தவறாக எழுதிய உன்னை நான் விரைவில் தோலை உரித்து தூக்கில் தொங்க விட முடியும்.   என் கணவர் நினைத்திருந்தால் 2006லேயே முதல்வர் ஆகி இருக்க முடியும்.   இந்த பத்திரிகையை நடத்துவது யார் என எனக்குத் தெரியும்.   உன்னை எங்கு கொண்டு போய் நிறுத்தப் போகிறேன் என்பதை நீயே விரைவில் அறிந்துக் கொள்வாய்” என சீரியலில் வரும் வில்லி போல சவால் விட்டுள்ளார்.

அந்த உறுப்பினர் யார் என்பதையும், அந்தப் பெண்ணின் பெயரையும் சொல்ல பத்திரிகை ஆசிரியர் மறுத்து விட்டார்.