திருநங்கையிடமிருந்து கணவரை மீட்டுக்கொடுங்கள்: காவலரின் மனைவி போராட்டம்

திருநெல்வேலியில் தன்னிடம் மறைத்து தனது கணவர் திருநங்கை ஒருவரை திருமணம் செய்துக்கொண்டதாக காவல்துறையில் பெண் ஒருவர் புகார் கொடுத்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் பாவூர்சத்திரம் பகுதியை சேர்ந்தவர் விஜயசண்முகநாதன். இவர் அதே பகுதியில் உள்ள காவல்நிலையத்தில் உதவி ஆய்வாளராக உள்ளார். இவருக்கு மனைவி மற்றும் இரு குழந்தைகளும் உள்ளனர். அதே பகுதியில் வசிக்கும் திருநங்கையான பபிதா ரோஸ், சமீபத்தில் தன் வீட்டின் மீது மர்ம நபர்கள் சிலர் கல்வீசியதாக காவல்நிலையத்தில் புகார் கொடுத்திருக்கிறார். அப்போது விஜயசண்முகநாதனுடன் ஏற்பட்ட பழக்கம் காரணமாக, இரு மாதங்களாக காதலித்து இருவரும் திருமணம் செய்துக்கொண்டனர். விஜயசண்முகநாதன், பபிதா ரோஸை திருமணம் செய்தது பற்றி, அவரது மனைவியிடம் தெரிவிக்காமலேயே இருந்துள்ளார்.

இது தொடர்பான தகவல் தெரிந்தவுடன் சில நாட்களுக்கு முன்பு  ஏற்கனவே திருமணமான தனது கணவரை, மனைவி உயிருடன் இருக்கும்போதே மறுமணம் செய்துக்கொண்ட திருநங்கை பபிதா ரோஸை கைது செய்து, தன் கணவரை தன்னிடம் மீட்டுக் கொடுக்கும் படி விஜயசண்முகநாதனின் மனைவி சக்தி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் புகார் அளித்துள்ளார். சக்தி அளித்த புகாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஏற்றுக்கொண்டாலும், அவற்றை கிடப்பிலேயே வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

கார்ட்டூன் கேலரி