பிரிந்த போன மனைவி: குழந்தைகளோடு தற்கொலை செய்துகொண்ட கணவர்

குடும்பத்தைவிட்டு மனைவி பிரிந்துபோனதால் இரண்டு குழந்தைகளுக்கு விசம் கொடுத்து தானும் விசம் அருந்தி கணவர் மரணமடைந்த சம்பவம் சென்னையில் நடந்துள்ளது.

சென்னை போரூர் காமதேனு நகரைச் சேர்ந்தவர் ஹபீப் ரஹ்மான் (வயது 38).  சமையல் காண்ட்ராக்ட் தொழில் செய்து வந்தார். இவருக்கும் இலங்கையை சேர்ந்த அனிஷா (வயது 34) என்பவருக்கும் 8 வருடங்களுக்கு முன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு நயிப்(வயது 7), ரியான்(வயது3) என்ற இரண்டு ஆண் குழந்தைகள் இருந்தார்கள்.

மண வாழ்க்கை மகிழ்ச்சியாக சென்றுகொண்டிருந்த நிலையில் அனிஷாவின் நடவடிக்கைகளில்  மாற்றம் ஏற்பட்டது. கணவனையும் குழந்தைகளையும் புறக்கணிக்க ஆரம்பித்தார்.

இது குறித்து கணவர் கேட்டபோதும் சரிவர பதில் அளிக்கவில்லை.

இதையடுத்து இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த நிலையில் கணவர், குழந்தைகளை விட்டுவிட்டு அனிஷா இலங்கைக்கு சென்றுவிட்டார்.

எப்படியும் அனிஷா திரும்பிவருவார் என்று கணவர் ஹபீப் ரஹ்மானும் குழந்தைகளும் காத்திருந்தனர்.

இந்நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன் அனீஷா இலங்கையிலிருந்து சென்னை திரும்பினார். ஆனால் வீட்டுக்கு வராமல் தனது நண்பரின் வீட்டில் தங்கியுள்ளார்.

இதனால் மனமுடைந்த கணவர் ஹபீப் கடந்த சனிக்கிழமை காலை விஷம் வாங்கி வந்து,  மதிய உணவில் விஷத்தை கலந்து இரண்டு குழந்தைகளுக்கும் கொடுத்திருக்கிறார். தானும் அதே உணவை உண்டிருக்கிறார். இதையடுத்து மூவரும் உயிரிழந்தனர்.

இந்த நிலையில் இன்று அவர்களது வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசவே அக்கம்பக்கத்தினர் சந்தேகமடைந்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் கதவை உடைத்துக்கொண்டு வீட்டினுள் சென்று பார்த்தபோது ஹபீப் ரஹ்மான், அவரது 7 வயது மகன் நயீப், மூன்று வயது மகன் ரியான் மூவரும் உடல் அழுகிய நிலையில் பிணமாக கிடந்துள்ளனர். அவர்களது உடலைக்கைப்பற்றிய காவலர்கள் பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

 

You may have missed