மதுரை:

தேனி மாவட்டம் குரங்கணி காட்டுக்கு மலையேற்ற பயிற்சிக்கு சென்றவர்கள்  காட்டுத்தீயில் சிக்கினர். இதில் நேற்று வரை 14 பேர் பலியான நிலையில் இன்று மேலும் 2 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

இதன் காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை 16ஆக அதிகரித்து உள்ளது.

தேனி மாவட்டம போடி அருகே உள்ள குரங்கிணி  கொழுக்குமலை வனப்பகுதியில், மலையேற்ற பயிற்சிக்கு சென்றவர்கள்,  காட்டுத்தீயில் சிக்கினர். மேலும் 15 பேர் மீட்கப்பட்டு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்தனர்.

இவர்களில்  12 பேர், மதுரையில் உள்ள ராஜாஜி அரசு மருத்துவமனை, அப்போலோ, மீனாட்சி மிஷன், கிரேஸ் கென்னட் ஆகிய தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்று வந்தனர். அவர்களில் 3 பேர் கோவை, ஈரோடு, சென்னைக்கு கொண்டு செல்லப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சிகிச்சை பெற்ற வந்தவர்களில் பலர் உயிருக்கு ஆபத்தான நிலையிலேயே சிகிச்சை பெற்று வருகின்றனர். தொடர்ந்து ஒவ்வொருவராக உயிரிழந்து வரும் நிலையில், நேற்று 2 பேர் உயிரிழந்தனர்.

இந்நிலையில், மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சத்யகலா மற்றும் தேவி ஆகிய இருவரும் இன்று மரணமடைந்தனர்.

சத்யகலா திருப்பூரை சேர்ந்தவர் என்றும், தேவி சேலம் மாவட்டம் எடப்பாடி பகுதியை சேர்ந்தவர் என்றும் கூறப்படுகிறது.

இதன் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 16ஆக அதிகரித்துள்ளது.