சென்னை:

குரங்கணி காட்டுத்தீயில் சிக்கி காயமடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி  மதுரைக்கு விரைகிறார்.

தேனி மாவட்டம் குரங்கணி பகுதியில் உள்ள மலையில் மலையேற்றப்பயிற்சிக்கு சென்றவர்களில் 9 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மேலும் 11 பேர்  மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் 4 பேர் ஆபத்தான நிலையில் மதுரை அரசு மருத்துவமனையிலும், மற்றவர்கள் தேனி மற்றும் போடி அரசு மருத்துவ மனையிலும், ஒரு சிலர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற வருகின்றனர். இவர்களில் 6 பேர் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து தகவல் அறிந்ததும், நேற்று இரவே  தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், ஆர்.பி.உதய குமார், விஜயபாஸ்கார் ஆகியோர் தேனி பகுதியில் முகாமிட்டு, காயமடைந்தவர்களுக்கு ஆறுதலும், மீட்புபணிகளை துரிதப்படுத்தியும் வருகின்றனர்.

இந்நிலையில் தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனும் மதுரை விரைந்து, அங்கு சிகிச்சை பெறுவர்களுக்கு தேவையான மருத்துவ வசதிகளை  செய்து வரும் நிலையில்,முதல்வர்  எடப்பாடி பழனிசாமியும் மதுரை விரைகிறார்.

சேலம் மாவட்டம் எடப்பாடியில் இன்று காலை நடைபெற்ற எம்.ஜி.ஆர். பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட அவர், அங்கு அம்மா இரு சக்கர வாகன திட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். பின்னர்,  அங்கிருந்து  கார் மூலம் மதுரை விரைகிறார்.

மதுரை மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களை  சந்தித்து ஆறுதல் கூறிவிட்டு, தேனிக்கு சென்று அங்கு சிகிச்சை பெறுவர்களை சந்தித்து ஆறுதல் கூற இருப்பதாக கூறப்படுகிறது.

அதைத்தொடர்ந்து இந்த காட்டுத்தீயில் பணியானர்களுக்கு வழங்கப்பட உள்ள நிவாரணம் குறித்து அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.