புதுடெல்லி: வரும் 2020ம் ஆண்டுகளில், ஆசியாவின் பல நாடுகள், 7% பொருளாதார வளர்ச்சி என்ற மைல்கல்லை எட்டும் என்றும், அந்த பத்தாண்டு காலகட்டம் ஆசியாவுக்கானதாக இருக்கும் என்றும் ஸ்டான்டர்ட் சார்டர்ட் குழுமத்தைச் சேர்ந்த பொருளாதார அறிஞர்கள் தெரிவிக்கிறார்கள்.

இந்தியா, வங்கதேசம், வியட்நாம், மியான்மர் மற்றும் பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகள் அந்தப் பட்டியலில் அடக்கம் என்றும் அவர்கள் தெரிவிக்கிறார்கள். மேலும், ஆஃப்ரிக்க கண்டத்தைச் ‍சேர்ந்த எத்தியோபியா மற்றும் கோட்டிவாய்ர் ஆகிய நாடுகளும் அந்த இலக்கை எட்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மதிப்பீட்டின்படி, ஒவ்வொரு 10 ஆண்டிலும், மொத்த உள்நாட்டு உற்பத்தி இருமடங்கு அதிகரிக்கும். மேலும், தனிநபர் வருவாயிலும் உயர்வு இருக்கும்.

இந்தியாவைப் பொறுத்தவரை அதன் மக்கள்தொகை ஒரு லாபம் எனில், வங்கதேசத்தைப் பொறுத்தவரை, சுகாதாரம் மற்றும் கல்வியில் செய்யப்பட்டுள்ள முதலீட்டால் உற்பத்தி அதிகரிக்க வேண்டும் என்றும், அந்தப் பொருளாதார ஆய்வாளர்களின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அடிப்படையில் பார்க்கும்போது, 2030ம் ஆண்டில், இந்தியர்களைவிட, வங்கதேசத்தவர்கள் பணக்காரர்களாக இருப்பார்கள் என்றும் தெரிவிக்கப்படுகிறது.