டில்லி

நீதிபதி தீபக் மிஸ்ராவின் மேல் பல முறைகேடுகள் செய்ததாக குற்றச்சாட்டு உள்ள நிலையில் அவரால் தலைமை நீதிபதி ஆக முடியுமா என்பது கேள்விக்குறியதாக உள்ளது.

தற்போதைய தலைமை நீதிபதி கேஹரின் பதவிக்காலம் வரும் 27ஆம் தேதியுடன் முடிவடைகிறது.  அடுத்து பதவி ஏற்க உள்ளவர்களில் சீனியாரிட்டி படி தீபக் மிஸ்ரா முதலில் இருக்கிறார்.  இந்திய தலைமை நீதிபதி பதவிக்கு பொறுப்புக்கள் அதிகம்.

பல அரசியல் முக்கியதுவம் வாய்ந்த வழக்குகள், மற்றும் பலரால் தீர்த்து வைக்க முடியாத சட்டச் சிக்கல் நிறைந்த வழக்குகள்.  இந்த நாட்டின் மக்களை பாதிப்புக்கு அல்லது மேம்பாட்டுக்கு வழி செய்யும் வழக்குகள் போன்ற பலவற்றையும் தலைமை நீதிபதி கையாள வேண்டி இருக்கும்.  அப்படி இருக்க சீனியாரிட்டி ஒன்றை மட்டும் வைத்து தலைமை நீதிபதியை தேர்ந்தெடுப்பது சரியாக வருமா என பல நீதிபதிகள் ஐயமுறுகின்றனர்.

இது குறித்து பல வழக்குகளில் உச்சநீதிமன்றம் தன்னுடைய கருத்துக்களை வெளியிட்டுள்ளது குறிப்பிடத் தக்கது.

தீபக் மிஸ்ராவின் மேல் பல முறைகேடுகள் செய்ததாக பலரும் குற்றம்சாட்டி வருகின்றனர்.  முதலாவதாக அவர் வழக்கறிஞராக 1979ல் பணியாற்றிய போது  அரசு நிலத்தை லீசுக்கு எடுத்துள்ளார்.  அந்த நிலம் வழங்க ஒடிசா அரசுக்கு அளித்த விண்ணப்பத்தில் அவர் ”நான் பிராமண வகுப்பை சேர்ந்தவன்.  எனக்கோ என் குடும்பத்தினருக்கோ நிலம் ஏதும் இல்லை” என குறிப்பிட்டுள்ளார்.  அந்த லீசை கட்டாக் மாவட்ட நீதிமன்றம் 1985ஆம் வருடம் ரத்து செய்துள்ளது.

அந்த தீர்ப்பில் “ஒடிசா அரசின் சட்டப்படி நிலமற்ற மற்றும் விவசாயத்தை தவிர வேறு எந்த தொழிலும் செய்யாதவர்களுக்கு மட்டுமே நிலம் லீசுக்கு அளிக்க வேண்டும்.  ஆனால் மிஸ்ரா நிலமற்றவர் இல்லை என்பது புலனாகியுள்ளது.  எனவே மிஸ்ரா தனது விண்ணப்பத்தில் தவறான தகவல் கொடுத்து ஏமாற்ற முயற்சித்ததல் இந்த லீசை நான் ரத்து செய்கிறேன்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால் அவர் அந்த நிலத்தை 2012ல் தான் அரசுக்கு திருப்பி அளித்ததாக சி பி ஐ வழக்கின் குறிப்பு ஒன்று தெரிவிக்கிறது.

மிஸ்ராவுக்கு அளித்ததைப் போல் பலருக்கும் முறைகேடாக நிலத்தை லீசுக்கு அளித்ததாக பல வழக்குகள் தொடுக்கப்பட்டன.  அதனால் சிபிஐ விசாரணைக்கு 2012ல் உத்தரவிடப்பட்டது.  சிபிஐ தனது விசாரணை அறிக்கையை 2013ல்  வெளியிட்டது.

அந்த அறிக்கையில், “இந்த வழக்கில் தீபக் மிஸ்ரா த/பெ ரகுநாத் மிஸ்ரா, துளசிப்பூர் கிராமம் என்னும் விலாசத்தைக் கொண்ட பான்பூர், பூரியில் வசிக்கும் நபருக்கு தாசில்தார் கான் 30.11.1979 அன்று இரண்டு ஏக்கர் நிலத்தை லீசுக்கு அளித்துள்ளார்.  இந்த லீஸ் 11.02.1985 அன்று நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டுள்ளது.  ஆனால் அந்த ஆவணம் 06.12.2012 அன்றே தாசில்தாரால் திரும்பப் பெறப்பட்டுள்ளது.  அதுவரை லீசுக்கு எடுத்தவர்கள் அந்த நிலத்தை காலி செய்து ஒப்புவிக்கவில்லை” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த விசாரணை அறிக்கை குறித்து உயர்நீதிமன்றம் எடுத்த நடவடிக்கைகள் பற்றி ஏதும் தகவல் இல்லை.

முன்னாள் அருணாச்சல பிரதேச முதல்வர் கலிக்கோ புல் தற்கொலை செய்துக் கொண்டது தெரிந்ததே.  அவர் தனது இறுதிக் கடிதத்தில் நீதிபதி மிஸ்ராவின் பெயரைக் குறிப்பிட்டுள்ளார். இந்த கடிதம் உண்மையானது என நிரூபணம் ஆன பின்பும் இது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இவ்வளவு சர்ச்சைகள் உள்ள ஒருவரை வெறும் சீனியாரிட்டி காரணமாக நாட்டின் உயர்பதவிகளில் ஒன்றான தலைமை நீதிபதி பதவிக்கு தேர்ந்தெடுக்க முடியுமா?

பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்