சென்னை

திமுக ஆட்சியில் நடந்த தூத்துக்குடி துப்பாக்கி சூட், பெண் எஸ் பிக்கு பாலியல் தொல்லை, பொள்ளாச்சி விவகாரம் குறித்து விளம்பரம் அளிக்குமா என முக ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார்.

வரும் 6 ஆம் தேதி தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில்  இன்று நாளேடுகளில் அதிமுக சார்பில் ஒரு விளம்பரம் வெளியானது.  அந்த விளம்பரத்தில் செய்தியை போல் முந்தைய திமுக மீது எழுந்த புகார்கள் குறித்து தெரிவிக்கபட்டுள்ளது.   அவை அனைத்தும் பழைய செய்திகள் என்றாலும் சமீபத்தில் நடந்தது போல் தோற்றம் இருந்தது.

இன்று இறுதிக்கட்ட பிரசாரமாக சென்னையில் பல தொகுதிகளில் திமுக தலைவர் முக ஸ்டாலின் கூட்டங்களில் கலந்துக் கொண்டு வருகிறார்.

அவர் ஆயிரம் விளக்கு பகுதி கூட்டத்தில்; தனது உரையில் “நான் தம்பி உதயநிதி ஸ்டாலினுக்கு ஓட்டுக் கேட்க வந்திருக்கிறேன். என் மனதில் இப்போது என்ன ஓடிக்கொண்டிருக்கிறது என்றால், நான் முதன்முதலில் ஆயிரம் விளக்கு தொகுதியில் வேட்பாளராக நின்றபோது தலைவர் எனக்காக வாக்குக் கேட்டார். அதுதான் என் நினைவிற்கு வருகிறது.

அவர் ஓட்டுக் கேட்கும்போது, “தமிழ்நாடு முழுவதும் சுற்றி சுற்றி வந்திருக்கிறேன். கடைசியாக ஆயிரம் விளக்கு தொகுதியில் வாக்குக் கேட்க வந்திருக்கிறேன். இங்கே இருக்கும் மக்கள் ஊர் ஊராகச் சென்று வாக்குக் கேட்கிறாய். உன் பிள்ளைக்கு வாக்குக் கேட்க மாட்டாயா? என்று கேட்டு விடக்கூடாது என்பதற்காக நான் வாக்குக் கேட்க வந்திருக்கிறேன்” என்று சொன்னார்.

அதேபோல நான் தமிழ்நாடு முழுவதும் வாக்குக் கேட்டுவிட்டேன். ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் சுற்றுகிறாரே தவிர அவரது பிள்ளைக்கு வாக்குக் கேட்கவில்லையே என்று நீங்கள் நினைத்து விடக்கூடாது என்பதற்காகத்தான் இப்போது உங்களிடத்தில் வாக்குக் கேட்க வந்திருக்கிறேன்.

இத் தொகுதிக்கு ஒரு பெரிய சிறப்பு உண்டு. நமது தலைவர் இந்தத் தொகுதியில் மூன்று முறை நின்று மூன்று முறையும் அமோகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அதைப் போல நம்முடைய பொதுச் செயலாளர், பேராசிரியர் இந்தத் தொகுதியில் நின்று வெற்றி பெற்று சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தார்.

தற்போதைய கருத்துக் கணிப்புகள் ஆளுங்கட்சிக்கு பயத்தை ஏற்படுத்தி இருக்கிறது. எனவே, அந்த அச்சத்தின் காரணமாக தோல்வி பயத்தின் காரணமாக ஏதேதோ உளற ஆரம்பித்திருக்கிறார்கள்.   அத்துடன் இன்றைக்குக் காலையில் எல்லா பத்திரிகைகளிலும் பக்கம் பக்கமாக விளம்பரங்கள் கொடுத்திருக்கிறார்கள்.

அதில் திமுக செய்த தவறுகள் என்று தலைப்புச் செய்திகளாகப் போட்டு இன்றைக்கு திமுக பெறவிருக்கும் வெற்றியை எப்படியாவது தடுத்திட வேண்டும் என்று அந்த முயற்சியில் அவர்கள் ஈடுபட்டிருக்கிறார்கள்.

நான் கேட்கிற ஒரே கேள்வி, கடந்த பத்து வருடங்களாக தமிழ்நாட்டில் யார் ஆட்சியில் இருக்கிறார்கள்? அதிமுகதான் ஆட்சியில் இருக்கிறது. நம் மீது ஏதாவது தவறு இருந்திருந்தால், அவர்கள் விளம்பரம் கொடுத்து இருக்கிறார்கள் அல்லவா, அவற்றைஉண்மை என்று நிரூபித்து, அது சம்பந்தமாக இதுவரை நம் மீது ஏதாவது வழக்குப் போட்டு இருக்கிறார்களா? ஒரு வழக்கு உண்டா? அல்லது அவ்வாறு வழக்குப் போட்டாலும் அவை நிரூபிக்கப்பட்டிருக்கிறதா?

அதிமுக கட்சியின் யோக்கியதை என்னவென்று கேட்டீர்கள் என்றால் ஜெயலலிதாவின் பதவியே பறிபோனது உங்களுக்குத் தெரியும். அம்மையார் சிறைக்குப் போன கதை உங்களுக்குத் தெரியும். ஒரு ஆட்சியில் முதல்வராக இருப்பவர் ஊழல் நிரூபிக்கப்பட்டு சிறைக்குச் சென்ற வரலாறுதான் அதிமுகவின் வரலாறு என்பதை நீங்கள் மறந்துவிடக் கூடாது.

சென்ற பத்து ஆண்டுகாலம் நீங்கள் ஆட்சியில் இருந்தபோது அதைப் பற்றிச் சிந்திக்காதவர்கள், நினைக்காதவர்கள். இன்றைக்கு தேர்தலுக்கு இரண்டு நாளைக்கு முன்பு இப்படி ஒரு விளம்பரத்தை கொடுத்து மக்களை திசை திருப்ப நினைக்கிறார்கள். அது ஒருக்காலும் நடக்காது. வரும் 6 ஆம் தேதி உங்களுக்குத் தக்க பதிலடியை மக்கள் கொடுப்பதற்குத் தயாராக இருக்கிறார்கள் என்பதை நான் அழுத்தம் திருத்தமாகத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

இன்றைக்குப் பொய்யான செய்திகளை எடுத்து உண்மையாக நடந்து இருப்பதைப் போல அந்த விளம்பரம் கொடுத்து இருக்கிறீர்கள். அந்த விளம்பரத்தைப் பார்த்தீர்கள் என்றால் அதை விளம்பரம் போல அமைக்கவில்லை. அதை இன்றைக்கு நேற்று நடந்த செய்தியைப் போலத் தயாரித்து வெளியிட்டிருக்கிறார்கள். விவரம் தெரியாதவர்கள் படித்துப் பார்த்தால் அதைச் செய்தியாகத்தான் படிப்பார்கள். அதை விளம்பரமாகப் பார்க்கமாட்டார்கள். நமக்கு அது தெரிந்ததால் விளம்பரம் என்று நினைக்கிறோம்.

பத்து வருடங்களாக இந்த ஆட்சியில் என்னென்ன கொடுமைகள் நடந்து இருக்கிறது? தமிழ்நாடு அதை மறந்துவிடும் என்று நினைக்கிறீர்களா? தூத்துக்குடியில் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். அதேபோல பொள்ளாச்சி சம்பவம். 250க்கும் மேற்பட்ட பெண்களைக் கடத்தி, பாலியல் பலாத்காரம் செய்து, அதை வீடியோ பதிவு செய்து, அதை அவர்களுக்குப் போட்டுக் காட்டி, மிரட்டி பணம் பறிக்கும் ஒரு கும்பல்.

அந்த நிகழ்வில் ஒரு முக்கிய பொறுப்பில் இருக்கும் அரசியல் தலைவருக்கு நெருக்கமானவர்கள், அவரோடு சேர்ந்த சிலர் கூட்டு சேர்ந்து இந்த அக்கிரமத்தைச் செய்திருக்கிறார்கள்.  ஆனால் இன்றைக்கு விளம்பரம் கொடுக்கிறார்கள். எல்லாவற்றையும் விடக் கொடுமை சட்டம்-ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டிய காவல்துறையில் பணிபுரிந்து கொண்டிருக்கும் ஒரு பெண் எஸ்.பி.க்கே பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டிருக்கிறது.

அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்தது காவல் துறையின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் ஸ்பெஷல் டிஜிபி. இவை எல்லாம் தவறாகத் தெரியவில்லை. உங்களுக்குத் திராணியிருந்தால் தைரியமிருந்தால் அதை விளம்பரமாகக் கொடுக்க வேண்டியதுதானே. அதையெல்லாம்  விட்டுவிட்டு 10 ஆண்டுகள் ஆட்சியிலேயே இல்லாத எங்கள் மீது பொய்யான விளம்பரத்தைச் செய்தி போல் பத்திரிகைகளில் வெளியிடுகிறீர்கள்.

மக்கள் நிச்சயமாகத் இதைத் தெரிந்து வைத்திருக்கிறார்கள். ஆகவே நான் உங்களை எல்லாம் மீண்டும் மீண்டும் கேட்டுக் கொள்ள விரும்புகிறேன். இவற்றுக்கு எல்லாம் முடிவு கட்ட வருகின்ற ஆறாம் தேதி நீங்கள் எல்லாம் தயாராக இருக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.