சென்னை: அதிமுகவில் ஏற்பட்டுள்ள உட்கட்சி பூசல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று தனது வீட்டில், ஆதரவாளர்களுடன் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதிமுக மீண்டும் இரண்டாக உடையும் வாய்ப்பு இருப்பதாக அரசியல் ஆய்வாளர்கள் கூறி வருகின்றனர்.

ஜெ.மறைவுக்கு பிறகு உடைந்த அதிமுக, பாஜக முயற்சியில் மீண்டும் ஒட்டவைக்கப்பட்டு, அதிமுக ஆட்சி நடைபெற்று வருகிறது.  ஜெ. சிறையில் இருந்தபோது, முதல்வராக பதவி வகித்த ஓபிஎஸ், சசிகலாவுக்கு எதிராக குரல்கொடுத்து, முதல்வர் பதவியை ராஜினாமா செய்ததால், சசிகலா  ஆதரவால், எடப்பாடி முதல்வராக்கப்பட்டார். பின்னர் மோடி தலையிட்டு, கட்சியை இணைக்க வலியுறுத்தி, துணைமுதல்வராக ஓபிஎஸ்-க்கு பொறுப்பு வழங்கப்பட்டது. அவரது ஆதரவாளர்களுக்கும் கட்சியில் சில பொறுப்புகள் வழங்கப்பட்டன. இருந்தாலும், முதல்வர், துணை முதல்வர் இடையே நீருபூத்த நெருக்காக உரசல் நீடித்து வருகிறது.

இந்த சூழலில் அடுத்த ஆண்டில் தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து கட்சி தலைமைகளுக்கு இடையே சலசலப்பு எழுந்துள்ளது. இது தொடர்பாக இபிஎஸ், ஓபிஎஸ் ஆதரவாளர்கள் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வரும் நிலையில், அதிமுக அமைச்சர்களும், தங்களது ஆதரவு  கருத்துக்களை கூறி கட்சிக்குள் சலசலப்பை உருவாக்கி வருகின்றனர்.

இந்த நிலையிலதான் நேற்று அதிமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில், முதல்வர் வேட்பாளர் குறித்து முடிவு செய்து அறிவிக்கப்படும் என எதிர்பார்த்த நிலையில், முதல்வர், துணைமுதல்வர் இடையே கடும் போட்டி எழுந்துள்ளது. சுமார் 5 மணி நேரம் நடைபெற்ற அதிமுக செயற்குழுவில், எந்தவொரு முடிவும் எடுக்க முடியாத நிலையில், எடப்பாடிக்கும், ஓபிஎஸ்-க்கும் இடையே நேரடி மோதல், வாக்குவாதம் நடைபெற்றதாகவும் தகவல்கள் வெளியானது.

இந்த நிலையில், இன்று வழக்கம்போல முதல்வர், ஊரடங்கு தொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுடன் காணொளி காட்சி மூலம் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த கூட்டத்தில் பொதுவாக துணைமுதல்வர் ஓபிஎஸ் கலந்துகொள்ளும் நிலையில், இன்றைய கூட்டத்தை புறக்கணித்து, தனது வீட்டில், ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

 இந்த ஆலோசனை கூட்டத்தில்,  கே.பி.முனுசாமி, மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம் உள்பட பலர் கலந்துகொண்டதாக கூறப்படுகிறது.  அவர்களுடன் கட்சியின் அடுத்தக்கட்ட நடவடிக்கை, முதல்வர் பதவி, ஆதரவாளர்களுக்கு பதவி தொடர்பாக விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

ஓபிஎஸ் தனியாக, தனது ஆதரவாளர்களுடன்  ஆலோசனை நடத்துவது எடப்பாடி ஆதரவாளர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.  எடப்பாடிக்கு எதிராக ஓபிஎஸ் மீண்டும் போர்க்கொடி தூக்கி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தினாலும், இதற்கு பின்னணியில் பாஜக செயல்படுவதாகவும் சில அதிமுக நிர்வாகிகள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

ஓபிஎஸ் மூலம், பாஜக தலைமை அதிமுகவை மீண்டும் உடைத்து, இரட்டை இலையை முடக்கி, அதிமுகவை செல்லாக்காசாக்கி, தமிழகத்தில் பாஜக காலூன்ற முயற்சி செய்வதாகவும் அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.

தற்போது அதிமுகவில் நடைபெற்று வரும் நிகழ்வுகளும், பாஜகவின் முயற்சிக்கு வலு சேர்ப்பதாகவே உள்ளது. ஓபிஎஸ் மூலம் அதிமுக மீண்டும் உடையும் (உடைக்கப்படும்) வாய்ப்பு அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.

முதல்வர் வேட்பாளர் குறித்து  அக்டோபர் 7ந்தேதி அறிவிக்கப்படும் என அதிமுக தலைமை அறிவித்துள்ள நிலையில், அன்று அதிமுக தலைமை செயலகம் ரணகளமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜெயலலிதா சமாதியில் மீண்டும் ஒரு மவுனவிரத போராட்டம் நடத்துவார் என்றும்,  தமிழக மக்களுக்கு தீபாவளி பரிசாக அதிமுக அரசு டிஸ்மிஸ் ஆகலாம். இரட்டை இலை முடக்கப்படலாம் எனவும் பரவி வருகின்றன.