வாஷிங்டன்: கோவிட்-19 தடுப்பு மருந்து, டிசம்பர் 11ம் தேதி வாக்கில், அமெரிக்கர்களுக்கு கிடைத்துவிடும் என்றுள்ளார் அந்நாட்டின் கொரோனா தடுப்பு மருந்து திட்டத்தின் தலைவர் மான்செஃப் சிலவோய்.

அதாவது, அந்த தடுப்பு மருந்திற்கு அனுமதி கிடைத்த அடுத்த 24 மணிநேரங்களுக்குள், விநியோக மையங்களுக்கு எடுத்துச் செல்லும் வகையில் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

கொரோனா தடுப்பு மருந்தை, விரைவில் நடைமுறைக்குக் கொண்டுவர பல நாடுகளும் முயற்சி செய்து வருகின்றனர். பிரிட்டனில், வயதுவாரியாக தடுப்பு மருந்து விநியோக முன்னுரிமை தொடர்பான அட்டவணையே வெளியாகிவிட்டது.

இந்நிலையில், அந்த ஏற்பாடுகள் அமெரிக்காவிலும் சூடுபிடித்துள்ளன. தற்போதைய நிலையில், அமெரிக்காதான் கொரோனா பாதிப்பில் உலகளவில் முன்னணியில் உள்ள நாடாகும்.

தடுப்பு மருந்திற்கு அனுமதி கிடைத்த அடுத்த நாளே, டிசம்பர் 11 அல்லது டிசம்பர் 12ம் தேதி வாக்கில், அந்த மருந்து விநியோக மையங்களுக்கு கொண்டு செல்லப்படும் என்று தான் எதிர்பார்ப்பதாக மான்செஃப் சிலவோய் கூறியுள்ளார்.