புதுடெல்லி: தற்போதைய பாரதீய ஜனதா தலைவர் அமித்ஷா, நரேந்திர மோடி அமைச்சரவையில் இணையும் பட்சத்தில், அவரின் இடத்தை ஜே.பி. நட்டா அல்லது தர்மேந்திர பிரதான் ஆகியோரில் ஒருவர் நிரப்புவர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில், குஜராத்தின் காந்தி நகர் தொகுதியில் அமித்ஷா போட்டியிட்டபோதே, பாஜக வெற்றிபெற்றால் அவர் மோடியின் அரசில் இணைவார் என்ற ஹேஷ்யங்கள் புறப்பட்டன.

தற்போது, மோடியின் எண்ணங்களை செயல்வடிவம் கொடுக்க அவர் அமைச்சரவையில் முக்கியப் பொறுப்பில் இடம்பெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அருண் ஜெட்லி உடல்நலனைக் காரணம் காட்டி அமைச்சர் பொறுப்பேற்காத பட்சத்தில், நிதியமைச்சர் பெறுப்பு அமித்ஷாவுக்கு தரப்படலாம் என்ற தகவல்களும் உலவுகின்றன.

பாஜக தலைவர்களிலேயே மிகவும் வெற்றிகரமான மற்றும் திறமையான தலைவராக கருதப்படுபவர் அமித்ஷா என்பது கவனிக்கத்தக்கது.

ஒருவேளை, அமித்ஷா மோடியின் அமைச்சரவையில் இணைந்தால், அவரின் இடத்தை மத்திய அமைச்சர்களாக இருந்த ஜே.பி.நட்டா அல்லது தர்மேந்திர பிரதான் ஆகியோரில் ஒருவர் நிரப்பலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.