சுற்றுச்சூழல் குறித்து பேசினால் கைதா? தமிழக அரசுக்கு கமல்ஹாசன் கேள்வி

சென்னை:

சுற்றுச்சூழல் குறித்து பேசினாலே, அதை குற்றம் என்று கூறி கைது செய்யும் தமிழக அரசின் நடவடிக்கையை ஒத்துக்கொள்ள முடியாது  என்று  மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலஹாசன் கூறி உள்ளார்.

சேலம் – சென்னை இடையே 8 வழி பசுமை விழிச்சாலை அமைக்கப்படும் என்றும் மத்திய அரசு அறிவித்து. அதற்கான பணிகளை தமிழக அரசு முடுக்கி விட்டுள்ளது. இந்த சாலை அமைவதால் ஏராளமான விவசாய நிலங்கள் அழிக்கப்பட்டு விடும் என்றும், அந்த பகுதி மக்களும், சமூக ஆர்வலர்களும் குரல் கொடுத்து வருகின்றனர்.

ஆனால், தமிழக முதல்வர் எடப்பாடியோ, ரூ.10 ஆயிரம் கோடி மதிப்பீட்டில்  கண்டிப்பாக பசுமை வழிச்சாலை அமைந்தே தீரும் என்று சட்டமன்றத்தில் தெரிவித்தார். அதைத்தொடர்ந்து   8 வழிப்பாதையாக பசுமை வழிச்சாலை அமைப்பதற்கான நடவடிக்கையில் மத்திய – மாநில அரசுகள் களமிறங்கியுள்ளன.

சாலை அமைய உள்ள பகுதிகளில் உள்ள நிலங்களை கையப்படுத்தும் வகையில், அந்த இடங்களை அளக்க அதிகாரிகள் முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர். இதற்கு அந்த நிலத்தின் உரிமையாளர்கள் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் குதித்துள்ளனர். அவர்களை கைது செய்து காவல்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.

மேலும், இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள சமூக ஆர்வலர் பியூஸ் மானுஸ், நடிகர் மன்சூர் அலிகான் உள்பட பலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், செய்தியாளர்கள், தமிழக அரசின் நடவடிக்கை குறித்து நடிகர் கமல்ஹாசனின் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த  கமல்,  சுற்றுச்சூழலைப் பற்றி பேசினாலே குற்றம் என்பதை ஏற்க முடியாது என்று கூறினார்.

மக்களை எல்லா விஷயத்திற்கும் கைது செய்கிறார்கள். சுற்றுச்சூழல் பிரச்சனைப் பற்றி பேசினாலே கைது செய்து வருகிறார்கள். இது சரியானதாக இல்லை. தமிழக அரசின் நடவடிக்கையை ஒத்துக்கொள்ள முடியாது  என்று கூறி உள்ளார்.