அத்திவரதர் தரிசனம் நீட்டிக்கப்படுமா? பொதுநல வழக்கை இன்று விசாரிக்கிறது சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை:

த்திவரதர் தரிசனத்தை நீட்டிக்கக் கோரி சென்னை உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு உள்ள பொதுநல வழக்கு இன்று விசாரணைக்கு வர உள்ளது. விசாரணையைத் அடுத்து அத்தி வரதர் தரிசனம் நீட்டிக்கப்படுமா என்பது தெரிய வரும்.

காஞ்சிபுரம் வரதராஜர் கோவிலில் நடைபெற்று வரும் அத்திவரதர் தரிசனம் இன்றுடன் முவடிடைந்து நாளை மீண்டும் குளத்திற்குள் வைக்கப்பட உள்ளார். அத்திவரதரை தரிசிக்க தினசரி லட்சக்கணக்கானோர் வருவதால், அத்திவரதரை தரிசிக்க மேலும் சில நாட்கள் நீட்டிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில்,  அத்திவரதரை 48 நாட்களுக்கு பின்னர் மீண்டும் குளத்தில் வைக்க வேண்டும் என எந்த ஆகம விதிகளும் இல்லை என்பதால், தரிசனத்தை நீட்டிக்க வேண்டும் எனக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அந்த மனுவில்,   1703ம் ஆண்டு கோவில் நிர்வாகிகள், குளத்தை சுத்தப்படுத்திய போது, அத்தி வரதர் சிலை கண்டெடுக்கப்பட்டதாகவும், அதன் பின்னர் 1937ம் ஆண்டு மீண்டும் வெளியே எடுக்கப்பட்ட சிலை 40 நாட்கள் பூஜை செய்யப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் 42 ஆண்டு களுக்கு பின்னர் 1979ல் மீண்டும் சிலை எடுக்கப்பட்ட போது, 13 ஆயிரம் பக்தர்கள் தரிசித்ததாகவும், கூட்டம் அதிகமாக இருந்ததால் தரிசன நாட்கள் 40 லிருந்து 48ஆக அதிகரிக்கப்பட்டதாகவும் மனுவில் கூறப்பட்டுள்ளது.

தற்போது நாளொன்றுக்கு சுமார் 5 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்து வரும் நிலையில், லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்ய முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி வருவதாகவும், எந்த ஒரு ஆகம விதியும் இல்லாத நிலையில் தரிசன நாட்களை நீட்டிக்குமாறு அறநிலையத் துறைக்கு உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கோரப்பட்டுள்ளது.

இந்த மனு நீதிபதிகள் மணிக்குமார் மற்றும் சுப்பிரமணியம் பிரசாத் அமர்வில் இன்று விசாரணைக்கு வருகிறது.

ஏற்கனவே  அத்திவரதர் தரிசனத்தை மேலும் 10 நாட்களுக்கு நீட்டிக்கக் கோரி சர்வதேச ஸ்ரீவைஷ்ணவ ராமானுஜ சாம்ராஜ்ய சபா தலைவர் சுவாமி கோவிந்த ராமானுஜ தாசர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.