சேலம்:

மமுகவில் இருந்து நீக்கப்பட்ட பெங்களூரு புகழேந்தி இன்று சேலத்தில் முதல்வர் எடப்பாடியை திடீரென சந்தித்து பேசினார். இது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், தான் முதல்வருக்கு தீபாவளி வாழ்த்து கூற சந்தித்ததாக கூறி உள்ளார்.

மேலும்,  அதிமுகவில் இணைவது குறித்து விரவில் அறிவிப்பேன் என்றும் தெரிவித்து உள்ளார்.

டிடிவி தினகரனின் அடாவடி காரணமாக, அவர்மீது அதிருப்தி கொண்ட பல நிர்வாகிகள் அமமுகவில் இருந்து வெளியேறி வருகின்றனர். முக்கிய நிர்வாகிகள் மாற்றுக் கட்சியை நோக்கி ஓடிய நிலையில், முன்னாள் அதிமுக அமைச்சர்களான செந்தில்பாலாஜி, கலைராஜன், தங்கத்தமிழ்செல்வன் போன்றோர் திமுகவுக்கு தாவி பதவி பெற்றுள்ளனர்.

இந்த நிலையில், டிடிவியின் வலது கரமாக செயல்பட்டு வந்த பெங்களூர் புகழேந்தி, டிடிவி மீதான அதிருப்தி காரணமாக, கட்சியை விட்டு வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளார். டிடிவியின் நடவடிக்கை காரணமாக அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் பாதி அழிந்து விட்டது  என்றும் குற்றம் சாட்டியிருந்தார்.

இந்த நிலையில், இன்று திடீரென சேலம் சென்ற புகழேந்தி, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை அவரது இல்லத்திற்கு சென்று சந்தித்தார். இது பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த புகழேந்தி, ‘அதிமுகவில் இணைவது குறித்தும் அரசியல் பற்றியும் முதல்வர் பழனிசாமியிடம் பேசவில்லை என்றவர், முதல்வருக்கு தீபாவளி வாழ்த்து தெரிவிக்கவே வந்தேன் என்றார்.

செய்தியாளர்களின் அதிமுகவில் இணைவது குறித்த கேள்விக்கு, அதிமுகவில் இணைவது குறித்து விரைவில் அறிவிப்பேன் என்றவர், இடைத்தேர்தலில் அதிமுக இமாலய வெற்றி பெற்றதற்கு முதல்வருக்கு வாழ்த்து தெரிவிக்க வந்தேன் என்றும் கூறினார்.

டிடிவிதினகரனுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ள நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சேலத்தில் உள்ள அவரது வீட்டில் புகழேந்தி சந்தித்து பேசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.