டில்லி

னி நடைபெறும் மாநில சட்டப்பேர்வை தேர்தல்களில் பாஜகவின் நிலை குறித்த ஒரு செய்தி

கடந்த 2014 ஆம் வருட மக்களவை தேர்தலுக்குப் பிறகு தொடர்ந்து பல மாநிலங்களில் பாஜக ஆட்சியைப் பிடித்தது.   ஆனால் கடந்த  2019 ஆம் வருடம் நடந்த மக்களவை தேர்தலில் பாஜக வெற்றி முகத்தைக் கண்டது ஒருபுறம் இருக்க,  கடந்த 2018 ஆம் வருடம் நவம்பர் மாதத்தில் இருந்து நடைபெற்று வரும் சட்டப்பேரவை தேர்தல்களில் பல மாநிலங்களில் தோல்வியைச் சந்தித்து வருகிறது.

கடந்த 2017 ஆம் வருடம் நாட்டில் 71% பகுதியில் ஆட்சியில் இருந்த பாஜக தற்போது அதில் பாதி அதாவது 35% பகுதியில் மட்டுமே ஆட்சி புரிந்து வருகிறது.    குறிப்பாக இந்தி பேசும் மாநிலங்களின் சட்டப்பேரவை தேர்தல்களில் பாஜக பெரும்பாலும் ஆட்சி இழந்துள்ளது.   அவ்வகையில் சமீபத்தில் ஜார்க்கண்ட் மாநிலத்தில் பாஜக தோல்வி அடைந்து ஆட்சியைப்  பறி கொடுத்துள்ளது.

இந்த மாநிலத்தில் ஆட்சியைப் பறி கொடுத்தது மட்டுமின்றி அதிக தொகுதிகளை வென்ற கட்சி என்னும் பெருமையையும் இழந்துள்ளது.    அத்துடன் ஆட்சியில் இருந்த போது தோல்வி அடைந்த முதல் ஜார்க்கண்ட் முதல்வராக ரகுபர் தாஸ் உள்ளார்.  தற்போது மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலுங்கானா, மிசோரம் உள்ளிட்ட பல மாநிலங்களில் பாஜக தோல்வியைச் சந்தித்துள்ளது.

மாநில சட்டப்பேரவை தேர்தல்களில் பாஜக தொடர்ந்து வெற்றி பெற்ற போது பாஜக தலைவர் அமித் ஷா, “மகாராஷ்டிராவில், அரியானாவில், காஷ்மீரில், ஜார்க்கண்டில் பாஜக வந்தது ஆனால் காங்கிரஸ் வெளியேறியது.  எனவே காங்கிரஸ் இல்லாத இந்தியா அமைய உள்ளது.” எனத்  தெரிவித்தார்.   ஆனால் அதே கால கட்டத்தில் டில்லி, பீகார், மேற்கு வங்கம், கேரளா, புதுச்சேரி, தமிழ்நாடு, பஞ்சாப், கர்நாடகா ஆகிய மாநிலங்களில் பாஜக தோல்வி அடைந்தது.

தற்போது பாஜக வெற்றி  பெற்றிருந்த பல மாநிலங்களில் காங்கிரஸ் மற்றும் கூட்டணிக் கட்சிகள் ஆட்சியைப் பிடித்துள்ளன.   ஆம் ஆத்மி ஆட்சி செய்யும் டில்லி மாநிலத்தில் வரும் 2020 ஆம் வருடம் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது.   அதைத் தொடர்ந்து பீகார், அசாம், கோவா, உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், இமாச்சலப்பிரதேசம், குஜராத், திரிபுரா உள்ளிட்ட பாஜக ஆளும் மாநில சட்டப்பேரவை தேர்தல்கள் நடைபெற உள்ளன.

இனி வரும் தேர்தல்களில் பாஜக நிலை என்ன என்பது கேள்விக்குறியாக உள்ளது.   குறிப்பாக வட மாநிலங்களான மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மகாராஷ்டிரா, அரியானா மற்றும் ஜார்க்கண்ட் மாநில தேர்தல் முடிவுகள் இந்த மாநிலங்களின் தேர்தலில் எதிரொலிக்கலாம் என அரசியல் ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.