எனது சாவுக்கு சிபிஐ-யே பொறுப்பு: இந்திராணி முகர்ஜி ஜாமின் கேட்டு மீண்டும் மனு

டில்லி:

நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்பட்ட ஷீனா போரா கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இந்திராணி முகர்ஜி மீண்டும் ஜாமின் கேட்டு கோர்ட்டில் மனு தாக்கல் செய்து உள்ளார். அதில் தனது சாவுக்கு சிபிஐயே பொறுப்பு என்று கூறி உள்ளார்.

இந்திராணி முகர்ஜி

ஏற்கனவெ பலமுறை ஜாமின் மனு தாக்கல் செய்யப்பட்டு, அது நிராகரிக்கப்பட்ட நிலையில், தற்போது தனது உயிருக்கு ஆபத்து உள்ளதாக கூறி ஜாமின் மனு தாக்கல் செய்துள்ளார்.

தனியார் தொலைக்காட்சி ஒன்றில் தலைமை பதவியில் இருந்து வந்த பீட்டர் முகர்ஜியின் மனைவியான இந்திராணி முகர்ஜி, தனது மகள் ஷீனா போராவை கொலை செய்த குற்றத்திற்காக கடந்த 201ம் ஆண்டு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.

3 முறை திருமணம் செய்துள்ள இந்திராணிக்கு 3 குழந்தைகள் உள்ளனர். இவர்களில் ஒருவருக்கு பிறந்த ஷீனாவுக்கும், பீட்டர் முகர்ஜியின் முன்னாள் மனைவி மகன் ராகுலுக்கும் இடையே ஏற்பட்ட காதல் காரணமாக, மகளை ராணி கொலை செய்தார். அவருக்கு உடந்தையாக இருந்தாக அவரது உறவினர் சஞ்சீவ் கன்னா, கார் டிரைவர் ஷாம் ராய் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டு  மும்பையில் உள்ள ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர்.

ஷீனா போரா கொலை வழக்கில் இந்திராணி முகர்ஜி, அவரது கணவர் பீட்டர் முகர்ஜி மற்றும் முன்னாள் கணவர் சஞ்சீவ் கண்ணா ஆகியோர் மீது கடந்த ஆண்டு ஜனவரி மாதம் மும்பை சி.பி.ஐ., நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில்,  மும்பையில் உள்ள பைக்குலா ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள இந்திராணி பல முறை ஜாமின் கேட்டும், நீதி மன்றம் அவருக்கு ஜாமின் வழங்க மறுத்துவிட்டது.

இந்த நிலையில், சமீபத்தில் இந்திராணிக்கு குறைந்த ரத்த அழுத்தம் ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து அவரை மும்பை ஜே.ஜே. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.

இந்த நிலையில்,  மேல்சிகிச்சை பெறுவதற்காக தன்னை ஜாமினில் விடுவிக்க வேண்டும் என மும்பையில் உள்ள சி.பி.ஐ. நீதிமன்றத்தில் இந்திராணி முகர்ஜி மீண்டும் மனு தாக்கல் செய்தார். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த போது அவரை ஜாமினில் விடுவிக்க சி.பி.ஐ. தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இதனால் கோபம்  அடைந்த இந்திராணி முகர்ஜி தானே வழக்கறிஞராக மாறி எதிர்வாதம் செய்தார். அப்போது, உடல்நலக்குறைவால் நான் செத்தால் சி.பி.ஐ. பொறுப்பேற்குமா? என எதிர்தரப்பு வக்கீலிடம் அவர் கேள்வி எழுப்பினார். இதனால் நீதிமன்றம் பரபரப்பு அடைந்தது. ஆனால்,  இந்திராணி முகர்ஜியை ஜானினில் விடுவிக்க நீதிபதி மறுத்து விட்டார்.