டெல்லி:

சிபிஎஸ்இ பொதுத்தோ்வுகளை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும் என்று உச்சநீதி மன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் 24ந்தேதி (நாளை) பதில் தெரிவிப்பதாக மத்தியஅரசு கூறி உள்ளது.

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) சாா்பில் நடத்தப்படவுள்ள 12-ம் வகுப்பு பொதுத் தோ்வுகளை ரத்து செய்வது குறித்து ஜூன் 24ல் முடிவு செய்யப்படும் என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசும், சிபிஎஸ்இயும் பதில் தெரிவித்து உள்ளன.

கொரோனா ஊரடங்கு காரணமாக, பல மாநில அரசுகள், மாநில தேர்வுகளை ரத்து செய்து அறிவித்து உள்ளன. அதுபோல சிபிஎஸ்இ தேர்வும் ரத்து செய்யப்பட வேண்டும் என்று பொதுமக்களிடையே கோரிக்கை எழுந்துள்ளது.

ஆனால், சிபிஎஸ்இ கல்வி வாரியம்,  12-ம் வகுப்பு மாணவா்களுக்கு நடத்தப்படாமல் மீதமுள்ள தோ்வுகளை ஜூலை 1-ஆம் தேதி முதல் 15-ஆம் தேதி வரை நடத்த முடிவு செய்திருப்பதாக அறிவித்து உள்ளது. ஆனால், தற்போதும் கொரோனா தொற்று பரவல் நாடு முழுவதும் உச்ச மடைந்து இருப்பதால், தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்று வருகிறது.

அதைத்தொடர்ந்து சிபிஎஸ்இ பொதுத் தோ்வு நடத்த தடை விதிக்க வேண்டும் என உச்சநீதி மன்றத்தில் பல மாணாக்கர்களின் பெற்றோர் சார்பில்  மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் கொரோனா  நோய்த்தொற்று பரவல் ஜூலை மாதத்தில் உச்சநிலையை அடையும் என்று எய்ம்ஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த சூழலில்,  சிபிஎஸ்இ பொதுத்தோ்வுகளை நடத்துவது லட்சக்கணக்கான மாணவா்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும், எனவே, சிபிஎஸ்இ கடந்த மாதம் 18-ஆம் தேதி வெளியிட்ட அறிவிக்கையை ரத்து செய்து உத்தரவிட வேண்டும். 12-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு நடத்தப்படாத தோ்வுகளுக்கு உள்மதிப்பீட்டுத் தோ்வுகளின் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்குமாறும் உத்தரவிட வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.

இந்த மனுமீதான விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது,  மத்திய அரசின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் ஆஜரான சொலிசிடர் ஜெனரல் துஷார் மேத்தா, மாணவர்களின் நலனில் மத்திய அரசும், சிபிஎஸ்இ நிர்வாகமும் அக்கறை கொண்டுள்ளன. இது குறித்து  நாளை  முடிவு செய்யப்பட இருப்பதாகவும்,  அதுவரை வழக்கை ஒத்தி வைக்குமாறு கூறினார்.

இதை ஏற்றுக் கொண்ட உச்ச நீதிமன்றம், வழக்கை ஜூன் 25-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது.