சென்னை மாநகராட்சி – பெண்களுக்காக சிறப்பு உடற்பயிற்சி கூடங்கள் அமையுமா?

சென்னை: தமிழக தலைநகரின் ஒவ்வொரு மண்டலத்திலும், பெண்களுக்கென்று குறைந்தபட்சம் 5 சிறப்பு உடற்பயிற்சிக் கூடங்கள் அமைக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்த கோரிக்கையை நீண்டநாட்களாக மகளிர் அமைப்புகள் வைத்து வருகின்றன. எனவே, மாநகராட்சி இதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

கடந்த 30 ஆண்டுகளாக நகர வாழ் பெண்களுக்கு உடல் பருமன் பிரச்சினை மூன்று மடங்கு அதிகரித்துள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன. இந்த இயந்திரமயமான காலகட்டத்தில், ஆண்களுக்கு நிகராக பெண்களும் பணிபுரிகின்றனர்.

அவர்கள் உடல் நலத்தைப் பேணுவதற்கான ஒரே சிறந்த வழியாக உடற்பயிற்சி அமைகிறது. சென்னை புறநகரில் ஏராளமான தனியார் உடற்பயிற்சி கூடங்கள் அமைந்துள்ளன. அவற்றில் பெரும்பாலானவை ஆண்களுக்கானதாகவும், யுனிசெக்ஸ் எனப்பதும் இருதரப்பினருக்குமானதாகவும் உள்ளன. பெண்கள் உடற்பயிற்சி மேற்கொள்வதை ஊக்கவிக்க, பெண்களுக்கான சிறப்பு உடற்பயிற்சி கூடங்கள் அவசியமாகிறது.

இதை மனதில் வைத்து, சென்னை மாநகராட்சியில் ஒவ்வொரு மண்டலத்திலும் பெண்களுக்கென்றே குறைந்தபட்சமாக 5 சிறப்பு உடற்பயிற்சி மையங்கள் அமைக்க வேண்டும் என பல மகளிர் அமைப்பினர் கோரிக்கை விடுக்கின்றனர். எதிர்வரும் மகளிர் தினத்தை முன்னிட்டு சென்னை மாநகராட்சி, அவர்களின் கோரிக்கைக்கு செவிசாய்க்கும் என்று எதிர்பார்க்கின்றனர்.