நவம்பர் 16ந்தேதி கல்லூரிகள் திறக்கப்படுமா? 12ந்தேதி சொல்வதாக அமைச்சர் அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் வரும் 16ந்தேதி கல்லூரிகள் திறக்கப்படுமா என்பது குறித்து வரும் 12ந்தேதி அறிவிக்கப்படும் என தமிழக உயர்கல்வித்துறை  அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார்.

கொரோனா  அச்சுறுத்தல் காரணமாக கடந்த 7 மாதங்களாக கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. இந்த நிலையில், அளிக்கப்பட்டுள்ள தளர்வுகள் காரணமாக, பல மாநிலங்களில் பள்ளிகள், கல்லூரிகள் மீண்டும் செயல்படத் தொடங்கி உள்ளன. இந்த நிலையில், தமிழகத்திலும் 16ந்தேதி முதல் ,  9, 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் செயல்பட தமிழக அரசு அனுமதி வழங்கியது. இதற்கு அரசியல் கட்சித் தலைவர்கள், கல்வியாளர்கள், ஆசிரியர் சங்கங்கள் உள்பட பல்வேறு தரப்பினர்  எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.  அதையடுத்து, பள்ளிகள் திறப்பு தொடர்பாக , தமிழகம் முழுவதும் உள்ள 9, 10, 11, 12-ம் வகுப்புகள் உள்ள பள்ளிகளில் சம்பந்தப்பட்ட மாணவ-மாணவிகளின் பெற்றோர்களிடம் கருத்துக் கேட்பு கூட்டம் இன்று நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன்,  நவம்பர் 16ந்தேதி கல்லூரிகள் திறக்கப்படுமா? இல்லையா என்பது பற்றி 12 ந்தேதி முடிவு அறிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.