கொரோனா நோயாளிகளுக்கு மருத்துவமனைகளில் படுக்கை கிடைக்குமா? இணையதளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது தமிழகஅரசு…

சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில், கொரோனா நோயாளிகளுக்கு அரசு மற்றும் அங்கீரிக்கப்பட்டுள்ள தனியார் மருத்துவ மனைகளில் படுக்கை கிடைக்குமா என்பது குறித்து அறிந்துகொள்ள பிரத்யேக இணையதளத்தை தமிழக சுகாதாரத்துறை அறிமுகப்படுத்தி உள்ளது.

ஸ்டாப் கொரோனா https://stopcorona.tn.gov.in/beds.php  என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள  இணையதளத்தில், எந்தெந்த மருத்துவமனைகளில் எத்தனை படுக்கைகள் காலியாக உள்ளது என்பதை எளிதாக அறிந்துகொள்ள முடியும்.

தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 10,723 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.  மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 9,91,451ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 3,304 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. உயர்ந்து வரும் பாதிப்புகளால், நோயாளிகள் மருத்துவமனைகளுக்கு படையெடுத்து வருகின்றனர்.

பல மாநிலங்களில் கொரோனா நோயாளிகளுக்கு போதிய படுக்கை வசதி மற்றும் ஆக்ஜிஜன் வசதி, வென்டிலேட்டர் வசதிகள் போன்றவை கிடைக்காமல் உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றன. இந்த  நிலையில்,  தமிழகஅரசு, தமிழகம் முழுவதும  கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள், அதில் உள்ள வசதிகள் குறித்து இணையதளத்தில் வெளியிட்டு உள்ளது. மேலும், இந்த  எத்தனை நோயாளிகள் சேர்க்கப்பட்டு உள்ளனர், மீதம் எத்தனை படுகைககள் உள்ளன என்பது குறித்தும் இணையதளத்தில் தினசரி பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி,

மாவட்டம்  வாரியாக ஒவ்வொரு கொரோனாவுக்கு சிகிச்சை வழங்கும் மருத்துவனை  பெயர்கள், அதில் உள்ள மொத்த படுக்கைகள் விவவரம்,  தற்போது எத்தனை நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்,    இன்னும் எத்தனை படுக்கைகள் காலியாக உள்ளன என்ற தகவல்கள் வெளியிடப்பபட்டு உள்ளது.

மேலும், நோயாளிகளுக்கு ஆக்சிஜன் வழங்கும் வகையிலான படுக்கைகள் எத்தனை, 

ஆக்சிஜன் வழங்க முடியாத நிலையில் உள்ள படுக்கைகள் எத்தனை,

ஐசியு எனப்படும் அவசர சிகிச்சை பிரிவில் உள்ள படுக்கைகள் விவரம்,

வென்டிலேட்டர் வசதியுடன் கூடிய படுக்கைகள் எத்தனை என்பது குறித்த தகவல்கள் தினசரி பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது.

இந்த இணையதள வசதியில்  தமிழகம் முழுவதும் உள்ள 396 மருத்துவமனைகள் இடம்பெற்றுள்ளன.  பொதுமக்கள் இந்த இணையதளத்தில் மூலம்,  கொரோனா நோயாளிகளை எந்த மருத்துவமனையில் சிகிச்சைக்கு  அனுமதிக்கலாம் என்பதை  எளிதில்  தெரிந்துகொண்டு  சேர்க்க முடியும்.

தமிழக அரசின் இந்த இணையதள சேவை வெகுவாக பாராட்டப்படுகிறது.