பீஜிங்

ரு பெண் கர்ப்பம் தரித்த போது கொரோனா தாக்கினால் அவர் வயிற்றில் உள்ள குழந்தை நிலை குறித்து சீன மருத்துவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் தொற்று பல உலக நாடுகளிலும் பரவி மக்களை கடுமையாக அச்சுறுத்தி வருகிறது.    கொரோனா தாக்குதலால் உலகெங்கும் சுமார் 6000 பேர் வரை உயிரிழந்துள்ளதாகக் கூறப்படுகின்றது.  சுமார் 1.5 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இந்த தொற்று ஆண், பெண் பேதமின்றி சிறியோர், பெரியோர் அனைவருக்கும் பரவி வருகிறது.

கர்ப்பம் தரித்த பெண்ணுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டால் அது அவர் வயிற்றில் உள்ள குழந்தையை பாதிக்குமா என கேள்வி எழுந்துள்ளது.  பிரபல சீன மருத்துவ பத்திரிகையான ’பிரண்டியர் இன் பிடியாஸ்டிரிக்ஸ்’ இதழில், “ஒரு பெண் கர்ப்பம் தரிக்கும் போது கொரோனா தாக்கம் ஏற்பட்டால் அது அவருடைய வயிற்றில் உள்ள குழந்தையைப் பாதிக்காது.   பல கர்ப்பம் தரித்த பெண்களிடம் இது குறித்த சோதனை நடந்தது.

இதில் அந்த பெண்களுக்கு மட்டுமே பாதிப்பு இருந்ததும், குழந்தைக்குத் தொற்று உண்டாகவில்லை என்பதும் உறுதியானது.   அந்த குழந்தைகள் பிறந்த பிறகு மருத்துவ கண்காணிப்பில் வைத்துச் சோதிக்கப்பட்டது.   அந்த குழந்தைகளுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்படவில்லை என்பது உறுதி ஆனது.   ஆயினும் ஓரிரு குழந்தைகளுக்குச் சுவாசப் பிரச்சினை ஏற்பட்டுச் சரி செய்யப்பட்டது.  அந்த குழந்தைகளிடமும் கொரோனா தொற்று காணப்படவில்லை” என தெரிவிக்கப்பட்டுள்ளது.