பயிற்சியைத் தொடங்குவார்களா கிரிக்கெட் வீரர்கள்?

புதுடெல்லி: ஊரடங்கு விதிகளில் தளர்வு ஏற்படுத்தப்பட்டால், மே மாதம் 18ம் தேதிக்குப் பிறகு பயிற்சியில் ஈடுபடலாம் என்று தெரிவித்துள்ளார் பிசிசிஐ பொருளாளர் அருண் துமால்.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, கடந்த மார்ச் மாதம் 22ம் தேதியிலிருந்து, இந்தியாவில் மூன்று கட்ட ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது.

இந்நி‍லையில், பிசிசிஐ பொருளாளர்  அருண் துமால் கூறியதாவது, “மூன்றாம் கட்ட ஊரடங்கு மே மாதம் 17ம் தேதியுடன் முடிவடைந்தாலும், அது மேலும் சில தளர்வுகளுடன் நீட்டிக்கப்படவுள்ளது. இந்நிலையில், தற்போது பயிற்சியில்லாமல் கிரிக்கெட் வீரர்கள் தங்கள் வீட்டிலேயே முடங்கியுள்ளனர்.

இதனால், அவர்களின் விளையாட்டுத் திறன் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே, மே 17ம் தேதிக்குப் பிறகு, தளர்த்தப்பட்ட ஊரடங்கு தொடங்குகையில், 18ம் தேதியிலிருந்து அணியின் கிரிக்கெட் வீரர்கள் அனைவரும் ஒரே மைதானத்தில் கூடி பயிற்சியில் ஈடுபடும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்படும்.

அதேசமயம், அனைவரும் ஒன்றுசேரும் வகையிலான போக்குவரத்து சாத்தியப்படாத பட்சத்தில், வீரர்கள் ஒவ்வொருவரும் தத்தமது வீட்டின் அருகிலுள்ள மைதானங்களில் பயிற்சி பெறும் வகையிலாவது ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும்” என்றுள்ளார்.