மும்பை: மகாராஷ்டிராவில் ஆட்சி அமைப்பது குறித்து, சிவசேனா அழைப்பு விடுத்தால் அதுபற்றி விவாதிக்கப்படும் என்று காங்கிரஸ் அதிரடியாக கூறியிருக்கிறது.

மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் பாஜக, சிவசேனா கூட்டணி பெரும்பான்மை பெற்றிருக்கிறது. இந்த கூட்டணி அங்கு மீண்டும் ஆட்சிமைக்க இருக்கிறது. அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிகிறது.

பாஜக கூட்டணி ஆட்சிக்கு தேவையான பெரும்பான்மையை பெற்றுள்ளது. ஆனாலும், ஆதித்யா தாக்கரேவுக்கு துணை முதலமைச்சர் பதவி வேண்டும் என்று பாஜகவை சிவசேனா நெருக்குவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

அதற்கு கட்டியம் கூறும் வகையில், சிவசேனாவின் அதிகாரப்பூர்வ நாளிதழான சாம்னாவில். அக்கட்சியால் பாஜக வெற்றி பெற்றதாக கட்டுரை தீட்டப்பட்டது. பாஜகவுக்கு தனிப்பெரும்பான்மை இல்லாததால், சிவசேனாவின் ஆதரவு ரொம்ப அவசியமாகிறது.

இந் நிலையில், எதிர்பாராத திருப்பமாக சிவசேனாவுக்கு காங்கிரஸ் ஆதரவு தருவது குறித்து விவாதிக்கப்படும் என்று காங்கிரஸ் கூறியிருக்கிறது. அம் மாநில காங்கிரஸ் தலைவர் பாலேசாகேப் தோரட் இந்த அழைப்பை விடுத்திருக்கிறார்.

செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில் கூறியிருப்பதாவது: ஆட்சி அமைப்பது குறித்து சிவசேனாவிடம் இருந்து எந்த தகவலும் எங்களுக்கு வரவில்லை. அவ்வாறு வந்தால் அதை நாங்கள் கட்சி தலைமையிடம் தெரிவிப்போம். கட்சியின் தலைமை இதுபற்றி முடிவு செய்யும் என்றார்.

சிவசேனா உடன் கூட்டணிக்கு வாய்ப்பு இல்லை என்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் ஏற்கனவே கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.