பெல்கிரேட்: கொரோனா பரவல் அதிகமுள்ள காரணத்தால், அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் பங்கேற்பது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை என்றுள்ளார் உலகின் முன்னணி வீரர் ஜோகோவிக்.
சமீபத்தில், குரேஷியாவில் கண்காட்சித் தொடர் நடத்திய காரணத்தால், ஜோகோவிக், அவரின் மனைவி உட்பட, வேறுபல டென்னிஸ் வீரர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்றியது.
இதனால், ஜோகோவிக் மீது கடும் விமர்சனங்கள் எழுந்தன. கொரோனாவுக்கு சிகிச்சைப் பெற்றுவந்த அவர், பூரண குணமடைந்தார் என்று செய்திகள் தெரிவித்தன. அதேசமயம், அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் அவர் பங்கேற்பாரா? என்ற சந்தேகமும் எழுந்தது.
இந்நிலையில் அவர் கூறியுள்ளதாவது, “கொரோனா தடுப்புக்கு நிதி திரட்டவே கண்காட்சித் தொடர் நடத்தினேன். பிரபலமானவர்கள் மீது எளிதில் குற்றம் சுமத்துவது எப்போதுமே நடந்துவரும் ஒன்றுதான்.
அமெரிக்காவில் தற்போதைய நிலையில், கொரோனா பரவல் மிக அதிகளவில் உள்ளது. எனவே, அங்கு நடைபெறவுள்ள அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் பங்கேற்பது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை” என்றுள்ளார் அவர்.