சென்னை: விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி திமுக உறுப்பினர் ராதாமணி காலமானதால், விக்கிரவாண்டி மற்றும் காங்கிரஸ் வெற்றிபெற்ற நாங்குநேரி ஆகிய 2 தொகுதிகளிலும் திமுகவே போட்டியிடுமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த வசந்தகுமார், தற்போது கன்னியாகுமரி தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வுசெய்யப்பட்டுள்ளார். எனவே, அந்த தொகுதி காலியாகவுள்ளது.

இதேபோன்று விக்கிரவாண்டி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்த திமுகவின் ராதாமணியும் தற்போது காலமாகிவிட்டதால், இரண்டு தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடைபெறும் சூழல் ஏற்பட்டுள்ளது.

தற்போது சட்டசபையில் 101 சட்டமன்ற உறுப்பினர்கள் பலத்துடன் இருக்கும் திமுக, இந்த இரண்டு தொகுதிகளிலும் (நாங்குநேரியை காங்கிரசுக்கு தராமல்) தானே போட்டியிட்டு, தனது பலத்தை மேலும் கூட்டிக்கொள்ள முயற்சிக்குமோ! என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

ஏனெனில், சமீபத்தில் பேசிய ஸ்டாலினின் மகன் உதயநிதியின் பேச்சு, திமுகவின் அந்த திட்டத்தை உணர்த்துவதாக இருந்ததாகவே அரசியல் பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால், நாங்குநேரியை விட்டுத்தருவதற்கு காங்கிரஸ் தரப்பில் கடுமையான எதிர்ப்புகள் கிளம்பும் என்றும் கூறப்படுகிறது.