சென்னை:

திமுக தலைவரின் மகனும், நடிகருமான உதயநிதி ஸ்டாலின் திமுக இளைஞரணி செயலாளராக இன்று அறிவிக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.

தமிழக அரசியலில் களமிறங்கி உள்ள திமுக தலைவரின் மகன் உதயநிதி ஸ்டாலின் அவ்வப் போது திமுக கூட்டங்களில் பங்கேற்று வந்த நிலையில், கடந்த ஓராண்டுக்கும் மேலாக தீவிர அரசியல் பணியாற்றி வருகிறார்.  நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலின்போது, திமுக மற்றும் திமுக கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்காக தீவிர பிரசாரம் மேற்கொண்டார்.

இதன் காரணமாக அவருக்கு கட்சியில் பதவி வழங்க, அவரது ஆதரவாளர்கள் திமுக தலைமை யிடம் வலியுறுத்தி வந்தனர்.

ஏற்கனவே பல ஆண்டுகளாக திமுகவின் இளைஞர் அணி தலைவராக இருந்து வந்த மு.க.ஸ்டா லின், கருணாநிதியால் திமுகவின் செயல்தலைவராக நியமிக்கப்பட்டார். அதையடுத்து இளைஞர் அணி செயலாளர் பதவிக்கு வெள்ளக்கோவில் சாமிநாதன் கடந்த 2017ம் ஆண்டு நியமிக்கப் பட்டார்.  கருணாநிதி மறைவுக்கு பிறகு மு.க.ஸ்டாலின் திமுக தலைவராக பதவி ஏற்றார்.

கருணாநிதி மறைவுக்கு பிறகு,  திமுக சார்பாக, ஸ்டாலினின் மகனான உதயநிதியும் களப்பணி களில் இறங்கி  தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போதே  உதயநிதிக்கு திமுகவில் முக்கிய பதவி வழங்கப்படும் என்ற கருத்து நிலவியது.

இதற்கிடையில், : திமுகஇளைஞர் அணி மாநிலச் செயலாளராக பதவி வகித்துவந்த முன்னாள் அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதன் தனது பதவியை ராஜினா செய்து விட்டதாகவும் தகவல் பரவியது. ஆனால், அதுகுறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாத நிலையில், உதயநிதி  இளைஞர் அணி செயலாளராக பதவி ஏற்கும் வகையிலேயே வெள்ளக்கோவல் சாமிநாதன் பதவி விலகியதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில்,  திமுக இளைஞரணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் இன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலினால் அறிவிக்கப்படுவார் என்று தகவல்கள் பரவி வருகின்றனர்.‘

தற்போது திமுகவின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான முரசொலியின்  நிர்வாக இயக்குநராக உள்ள உதயநிதி ஸ்டாலின் முதல்முறையாக திமுகவில் கட்சி பொறுப்பில் இணைய உள்ளார்.