வேகம் காட்டும் அதிமுக – திமுக முகாம் என்ன செய்கிறது?

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலையொட்டி, ஆளும் அதிமுக, தனது ஒரு முக்கிய கூட்டணி கட்சியுடன் தொகுதிப் பங்கீடு எண்ணிக்கையை முடித்துவிட்டது. ஆனால், திமுக முகாமில், முதல் முக்கிய கூட்டணி கட்சியான காங்கிரசுடன் இன்னும் பேச்சுவார்த்தை தொடர்ந்து கொண்டுள்ளது.

தேர்தல் அறிவிப்புக்கு முன்பிருந்தே, இரு பிரதான கட்சிகளும், தங்கள் கூட்டணியின் சில கட்சிகளுடன் பேச்சுவார்த்தைகளை நடத்திவந்தன. அதுதொடர்பாக ஊக செய்திகள் நிறைய கசிந்துவந்தன.

இந்நிலையில், நேற்று அதிகாரப்பூர்வ தேர்தல் அறிவிப்பு வெளியான மறுநாளே, தனது முக்கிய கூட்டணிக் கட்சியான பாமகவுடன் தொகுதி ஒதுக்கீடு எண்ணிக்கையை முடித்துவிட்டது அதிமுக.

ஆனால், திமுக முகாமில், காங்கிரஸ் கட்சியுடனான பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெறுகிறது. தேர்தலுக்கு மிகக் குறுகிய காலமே எஞ்சியிருக்கும் சூழலில், வேகமாக அனைத்தையும் முடிக்க வேண்டிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

காங்கிரசுடன் எண்ணிக்கை முடிவாகும் பட்சத்தில், அடுத்து சிறிய கட்சிகளான கம்யூனிஸ்டுகள், மதிமுக, விசிக, முஸ்லீம் கட்சிகளுடன் திமுக டக்டக்கென்று விஷயத்தை முடித்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.