சென்னை: அண்ணா பல்கலை.யில் நிகழ்ந்த பணி நியமனம் உள்ளிட்ட அனைத்து புகார்கள் குறித்தும் விசாரிக்கப்படும் என்று விசாரணை ஆணைய நீதிபதி கலையரசன் தெரிவித்துள்ளார்.

சென்னை அண்ணா பல்கலைக் கழக துணைவேந்தர் சூரப்பா மீது சுமத்தப்பட்டுள்ள ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி கலையரசன் விசாரணை நடத்த உள்ளார்.

சூரப்பா பதவியேற்ற முதல் நாளில் இருந்து தற்போது வரை அண்ணா பல்கலைகழக நிகழ்ந்த அனைத்து நிகழ்வுகள், பணி நியமனங்கள் விசாரிக்கப்படும் என்றும் தேவைப்பட்டால் சூரப்பா பதவி ஏற்பதற்கு முன்பு நடந்த நியமனங்கள் தொடர்பாகவும் விசாரணை நடத்த உள்ளதாக கலையரசன் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறியதாவது: வங்கி கணக்குகளும் விசாரணைக்கு உட்படுத்தப்படும். சூரப்பா தொடர்பான முறைகேடு மற்றும் ஊழல் குறித்து யார் வேண்டுமானாலும் எழுத்துப் பூர்வமாக புகார் அளிக்கலாம்.

உரிய ஆதாரங்கள் இருக்கும் நிலையில், புகார்கள் குறித்து  முழுவிசாரணை நடத்தப்படும். காவல், நிதி மற்றும் நிர்வாக அனுபவம் பெற்ற அதிகாரிகள் உட்பட 10க்கும் மேற்பட்ட நபர்களை அலுவலர்களாக நியமிக்க உயர் கல்வித் துறையிடம் கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

அலுவலர்கள் நியமிக்கப்பட்டவுடன் விசாரணை தொடங்கும். அண்ணா பல்கலைக்கழக வளாகம், உறுப்பு கல்லூரிகளுக்கு தேவைப்பட்டால்  சென்று விசாரணை நடத்துவேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.