நியூயார்க்:
பேஸ்புக் நிறுவனத்தின் சார்பில் அனுப்பப்படவிருந்த செயற்கைக்கோள் உட்பட மேலும் 5 செயற்கைக்கோள்களை சுமந்துகொண்டு விண்ணுக்குச் செல்லவிருந்த ராக்கெட் ஏவுதளத்திலேயே வெடித்துச் சிதறியதில் 6 செயற்கைக்கோள்களும் எரிந்து சேதமாகிவிட்டன. இச்சம்பவம் குறித்து பேஸ்புக் அதிபர் மார்க் தனது ஏமாற்றத்தையும் வருத்தத்தையும் பதிவு செய்துள்ளார்.
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் ஸ்பேஸ் எக்ஸ் என்ற நிறுவனத்தின் மூலம் “ஸ்பேஸ் எக்ஸ் ஃபால்கான் 9” என்ற ராக்கெட்  விண்ணில் செலுத்தப்பட இருந்தது. இதன்  இறுதிக்கட்ட எரிபொருள் சோதனை நடந்தபோது எதிர்பாராதவிதமாக வெடித்து சிதறியது. இந்த விபத்தில் உயிர்ச்சேதம் ஏதுமில்லை. ஆனாலும் பலகோடி மதிப்புள்ள பொருள் இழப்பு ஏற்பட்டுள்ளது.

வெடித்த ராக்கெட் - பேஸ்புக் அதிபர் மார்க்
வெடித்த ராக்கெட் – பேஸ்புக் அதிபர் மார்க்

இந்த விபத்து ஏற்பட்ட காலை 9:07 மணியிலிருந்து தொடர்ந்து நான்கு நிமிடங்களுக்கு மேல் தொடர்ந்து வெடிச்சத்தம் கேட்டவண்ணமிருந்ததாகவும், அப்பகுதி முழுவதும் புகைக்காடாக மாறியிருந்ததாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்திருந்தனர். விபத்து நடந்த இடம் நாசாவுக்கு சொந்தமான இடம் என்பதும், நாசா சம்பந்தப்பட்ட உடைமைகள் எதுவும் சேதமாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த ராக்கெடுடன் சேர்ந்து விண்ணில் செலுத்தப்படவிருந்த 6 செயற்கைக்கோள்களும் எரிந்து சாம்பலாயின. அவற்றுள் பேஸ்புக் நிறுவனத்துக்கு சொந்தமான செயற்கைக்கோளும் ஒன்று.  அந்த செயற்கைக்கோள் ஐரோப்பா, ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் பேஸ்புக் வசதியை மேம்படுத்தும் நோக்கோடு அனுப்பப்படவிருந்ததாக தெரிகிறது.  இதுகுறித்து பேஸ்புக் அதிபர் மார்க் ஜூகர்பெர்க் தனது ஆழ்ந்த வருத்தத்தையும் ஏமாற்றத்தையும் பதிவு செய்துள்ளார்.
இதனால் பேஸ்புக் தகவல் தொடர்பில் பிரச்சினை இருக்குமா என்ற கேள்வி எழுந்தது. இதற்கு, “ஏற்கெனவே பேஸ்புக் உள்ளிட்ட எங்களது சமூகவலைதள நெட் ஒர்க் அனைத்தும் சிறந்த தகவல் தொடர்பில் இருக்கிறது. ஆகவே பேஸ்புக் தகவல் தொடர்பில் எந்தவித இடர்ப்பாடும் இருக்காது” என்று பேஸ்புக் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
ராக்கெட் வெடித்துச் சிதறிய வீடியோ காட்சி:
[KGVID]https://patrikai.com/wp-content/uploads/2016/09/Explosion-at-Cape-Canaveral-Air-Force-Station.mp4[/KGVID]