பெங்களூரு:

22 மக்களவைத் தொகுதிகளில் வெற்றி பெற்ற 24 மணி நேரத்தில் கர்நாடகாவில் பாஜக ஆட்சி அமைக்கும் என கர்நாடக பாஜக தலைவர் எடியூரப்பா கூறியுள்ளார்.


பெலாகவி அருகே யாராகட்டி கிராமத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய பாஜக தலைவர் எடியூரப்பா, “கர்நாடகாவில் 22 மக்களவைத் தொகுதிகளிலும் பாஜக வெற்றிபெற்றால், அடுத்த 24 மணி நேரத்தில் மாநிலத்தில் பாஜக ஆட்சி அமைக்கும்” என்றார்.

இதுபோன்று பரபரப்பாக பேசுவது எடியூரப்பாவுக்கு புதிதல்ல. பாகிஸ்தானின் பால்கோட் தீவிரவாத முகாமில் இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியபிறகு, கர்நாடகாவில் 22 மக்களவைத் தொகுதிகளிலும் பாஜக வெற்றி பெறும் என்று எடியூரப்பா கூறியிருந்தார்.

கர்நாடகாவில் மொத்தம் 28 மக்களவை தொகுதிகள் உள்ளன. இதில் பாஜக 16 தொகுதிகளிலும், காங்கிரஸ் 10 தொகுதிகளிலும், மதசார்பற்ற ஜனதா தளம் 2 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன.

கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக 104 தொகுதிகளிலும், மதசார்பற்ற ஜனதா தளம் 37 தொகுதிகளிலும், காங்கிரஸ் 80 தொகுதிகளிலும் வெற்றிபெற்றன.

111 எம்எல்ஏக்கள் ஆதரவுடன் ஆட்சியமைத்த எடியூரப்பா, பின்னர் பதவி விலகினார்.
அப்போதிலிருந்தே தற்போது நடக்கும் காங்கிரஸ்-மதசார்பற்ற ஜனதா தளம் கூட்டணி ஆட்சியை கவிழ்க்கும் நடவடிக்கையில் வெளிப்படையாகவே ஈடுபட்டு வருகிறார்.

தொடர்ந்து சர்ச்சைக்குரிய வகையிலும் பேசிவருகிறார். எடியூரப்பாவின் இத்தகைய போக்கு பாஜகவின் மூத்த அரசியல் தலைவர்கள் மத்தியிலேயே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.