தீபாவளிக்கு அரசு பேருந்துகள் இயங்குமா? போக்குவரத்து தொழிற்சங்கங்கள் நாளை முக்கிய அறிவிப்பு

சென்னை:

வேலை நிறுத்த போராட்டம் குறித்து தமிழக போக்குவரத்து ஊழியர் தொழிற்சங்கத்தினர் நாளை முக்கிய அறிவிப்பு வெளியிட இருப்பதாக தெரிவித்து உள்ளனர்.

நாளை பல்லவன் இல்லம் முன்பு நடைபெறும் வாயிற் கூட்டத்தில், போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் குறித்த முடிவை அறிவிக்கப்போவதாக தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக பரபரப்பு நிலவி வருகிறது.

போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் செய்வது தொடர்பாக அறிவிப்பு வெளியிட்டால், தீபாவளி பண்டிகையை யொட்டி சொந்த ஊருக்கு செல்லும் வகையில் அரசு பேருந்துகளில் டிக்கெட் முன்பதிவு செய்திருப்பவர்களும், அரசு பேருந்தை நம்பி இருப்பவர்கள் பாடு திண்டாட்டமாகி விடும் என்று அஞ்சப்படுகிறது.

போக்குவரத்து தொழிலாளர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கை ரத்து, போக்குவரத்து தொழிலாளர்களுக்கு கொடுக்க வேண்டிய ரூ.6,800 கோடி நிலுவைத் தொகையை உடனே  வழங்க வேண்டும், தீபாவளி முன்பணம், இடமாற்றம் செய்யப்பட்ட 86 தொழிலாளர்களின் இடமாற்றத்தை ரத்து செய்ய வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிலாளர்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வந்தனர்.

ஏற்கனவே கடந்த 22 மற்றும் 23ந்தேதி நடைபெற்ற மதொழிற்சங்கங்க தலைவர்கள், போக்குவரத்து கழக அதிகாரிகள், தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள்  கலந்துகொண்ட முத்தரப்பு பேச்சு வார்த்தையின்போது, போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றி தரப்படும் என்று  உறுதி அளிக்கப்பட்டதாகவும், ஆனால், 3வது கட்ட பேச்சு வாத்தையில்  தீர்வு எட்டப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.

இதைத் தொடர்ந்து போக்குவரத்து தொழிலாளர்கள் மீண்டும் ஸ்டிரைக்கில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.  நாளை பல்லவன் இல்லம் முன்பு நடைபெறும் தொழிற்சங்கத்தினர் கலந்துகொள்ளும் வாயிற் கூட்டத்தில் போராட்டம் குறித்து  அறிவிக்கப் போவதாக தொ.மு.ச. பேரவை பொதுச் செயலாளர் மு.சண்முகம், சி.ஐ.டி.யு. சவுந்தரராஜன் மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகள் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.

ஏற்கனவே பலமுறை போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்து தங்களது எதிர்ப்பை அரசுக்கு தொடர்ந்து தெரிவித்து வரும் நிலையில், நாளை வெளியிட இருக்கும் போராட்ட அறிவிப்பு மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதன் காரணமாக தீபாவளி பண்டிகையை கொண்டாட சொந்த ஊருக்கு செல்ல இருக்கும் பொதுமக்கள் அச்சத்துடனேயே  உள்ளனர். அரசு உடனயாக தலையிட்டு பேச்சு வார்த்தை நடத்தி, போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபடாதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.