புதுடெல்லி: கடந்த 2010 முதல் 2017ம் ஆண்டுவரை குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட ஐ.ஏ.எஸ். அதிகாரிகளின் பட்டியலை வெளியிடுமாறு, மத்திய அரசை கேட்டுக்கொண்டுள்ளது மத்திய தகவல் ஆணையம்.

சமூக ஆர்வலர் நுதான் தாகூர், கடந்த 2017ம் ஆண்டு தாக்கல் செய்த தகவல் அறியும் உரிமைச் சட்ட மனுவின் அடிப்படையிலேயே, மத்திய அரசிடம் இவ்வாறு கூறியுள்ளது மத்திய தகவல் ஆணையம்.

அதாவது தம்மீதான புகார் குறித்த விசாரணைக்கு அனுமதியளிக்கப்பட்ட மற்றும் அனுமதி மறுக்கப்பட்ட ஐ.ஏ.எஸ். அதிகாரிகளின் பெயர்களை வெளியிடுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

சமூக ஆர்வலர் தாக்கூர் தரப்பில் கூறப்படுவதாது, “குற்றச்சாட்டிற்கு ஆளான ஐ.ஏ.எஸ். அதிகாரிகளின் பட்டியல் வெளியிடப்பட்டால், அதன்மூலம் சிறந்த மற்றும் வெளிப்படையான நிர்வாகத்திற்கு வழிவகுக்கும் மற்றும் பொதுநலன் கருதியே இதை செய்ய வேண்டும்” என்றுள்ளனர்.

தற்போது மத்திய அரசுக்கு இரண்டு வாய்ப்புகள்தான் உள்ளன. ஒன்று, பட்டியலை வெளியிட வேண்டும் அல்லது மேல்முறையீட்டிற்காக உயர்நீதிமன்றத்தை நாட வேண்டும்.

– மதுரை மாயாண்டி