நரேந்திர மோடியின் இரண்டாவது கட்ட ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திருத்தப்பட்ட மோட்டார் வாகனச் சட்டம், செப்டம்பர் 1ம் தேதி நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டதிலிருந்து, அதுதொடர்பான பரபரப்பு இன்னும் அடங்கவில்லை. இன்னும் பல நாட்களுக்கு அடங்காது என்ற நிலையே நிலவுகிறது.

புதிய சட்டத்தில் அதிக எதிர்ப்பை சம்பாதித்திருக்கும் அம்சம் பலமடங்கு அதிகரிக்கப்பட்ட அபராத தொகைகள்தான். புதிய சட்டம் வாகன ஓட்டிகளுக்கு நிச்சயம் மகிழ்ச்சியான ஒன்றாக இருக்க வாய்ப்பில்லைதான். பல இடங்களில் அவர்கள் தங்களின் எதிர்ப்பை பதிவு செய்கிறார்கள். சில இடங்களில் உச்சகட்ட கோபத்தில் தங்களின் வாகனத்தையே எரித்த சம்பவங்களும் நடைபெற்றுள்ளன.

அதேசமயம், பல மாநிலங்கள் இந்த அபராதத் தொகைகளை குறைத்து அமல்படுத்தியுள்ளன மற்றும் சில மாநிலங்கள் இந்த சட்டத்தை அமல்படுத்த முற்றிலும் மறுத்து வருகின்றன. இந்த சட்டம் பொதுப்பட்டியலில் வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
அதேசமயம், இந்தியாவின் சாலைப் பாதுகாப்பை உறுதிசெய்ய இந்த சட்டம் கட்டாயம் என்று கருதுகிறது மத்திய அரசு.

“இந்தியாவில் சாலை விபத்துகளில் பலியாவோர் எண்ணிக்கை உலகளவில் மிக அதிகமாக இருக்கிறது” என்கிறார் மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி. உலக சுகாதார அமைப்பினுடைய அறிக்கையின்படி, இந்தியாவின் சாலைப் பாதுகாப்பு மோசமாக இருக்கிறதென்ற தகவல் வருகிறது. அதேசமயம், மிகவும் மோசம் அல்ல என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த 2016ம் ஆண்டில் இந்தியாவில் சாலை விபத்துக்களில் இறந்தவர்களின் விகிதம் 22.7%. மொத்தம் 175 நாடுகளுடன் ஒப்பிடுகையில், இந்தியா இந்த விஷயத்தில் 58வது இடம் பிடித்தது. அதேசமயம், நமது அண்டை நாடுகளான பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் ஆகிய நாடுகளைவிட இது அதிகம் என்பதும் கவனத்தில் கொள்ளத்தக்கது.

சாலைப் பாதுகாப்பு என்பது ஒரு நாட்டின் வளத்துடன் ஒப்பிடப்படுகிறது. பணக்கார நாடுகள் பாதுகாப்பான சாலைகளை உடையவை என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. உலகின் வளமான நாடுகளாக கருதப்படும் சிங்கப்பூர், ஸ்வீடன் மற்றும் நார்வே ஆகிய நாடுகளில் சாலை விபத்து மரணங்கள் மிகவும் குறைவு.

அதேசமயம், உலகின் ஏழை மற்றும் முன்னேற்றமில்லாத நாடுகளாக கருதப்படும் தெற்கு சஹாரா நாடுகளின் சாலை விபத்துகளில் இறப்போரின் எண்ணிக்கை மிக அதிகம் என்பதும் ஒப்பிடத்தக்கது.

உலகளவில் பார்க்கும்போது, சாலை விபத்துகளில் அதிகம் இறப்பவர்கள் 15 முதல் 29 வயது காலகட்டங்களில் இருப்பவர்கள். இதனால், ஒரு நாட்டிற்கு பொருளாதார இழப்பும் ஏற்படுகிறது. ஏனெனில், இந்த வயதுடையவர்கள் உழைக்கும் சக்திகள். இவர்கள் மரணிக்கும்போது ஒருநாட்டின் உழைப்புத் திறனும் குறைகிறது. இந்தியாவின் சாலை விபத்து மரணங்களை கணிசமாக குறைத்தால், அதன் ஜிடிபி வளர்ச்சியும் அதிகரிக்கும் என்று உலக வங்கியின் ஒரு அறிக்கை சுட்டிக் காட்டுகிறது.

அதேசமயம், சாலைப் பாதுகாப்பில் சிறப்பிடம் என்ற நிலையை அடைய இந்தியா இன்னும் அதிக தூரம் செல்ல வேண்டியுள்ளது என்பதையும் குறிப்பிட வேண்டியுள்ளது. இந்திய சாலைப்போக்குவரத்து அமைச்சகத்திடமிருந்து சமீபத்தில் வெளியான ஒரு தரவின்படி, கடந்த 2017ம் ஆண்டில் மட்டும் இந்தியாவில் நிகழ்ந்த சாலை விபத்துகளின் எண்ணிக்கை 4,64,910. இவற்றில் மரணமடைந்தோரின் எண்ணிக்கை 1,47,913.

அதேசமயம், இந்த எண்ணிக்கை குறைவாக இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. ஏனெனில், இந்தியாவின் கிராமப்புற பகுதிகளில் நிகழும் பல சாலை விபத்து மரணங்கள் பதிவில் வராமலேயே போய்விடுகின்றன. எனவே, மரண எண்ணிக்கையானது அதிகாரப்பூர்வ விபரங்களைவிட 47% முதல் 63% வரை அதிகமாக இருக்கும் என்று மதிப்பிடப்படுகிறது.

இந்தியாவில், சில சாலைகள் பிற சாலைகளைவிட அதிக ஆபத்தானவையாக இருக்கின்றன. இந்தியாவின் சில ஆபத்தான சாலைகள் தமிழ்நாட்டில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த சாலைகளின் இறப்பு விகிதம் 23.2%. அதற்கடுத்த ஆபத்தான சாலைகள் ஹரியானாவில் இருக்கின்றன. அங்கே இறப்பு விகிதம் 18.4%.

பாதுகாப்பான சாலை விஷயத்தில் பீகாரும், மேற்குவங்கமும் வருகின்றன. பீகாரில் இறப்பு விகிதம் 5.3% என்ற அளவிலும், மேற்கு வங்கத்தில் 6.1% என்ற அளவிலும் உள்ளது. சாலை விதிகளின் அமலாக்கம், சாலைக் கட்டமைப்பு மற்றும் வாகன ஓட்டிகள் போன்ற அம்சங்களின் மாறுபாடுகள் இந்த வித்தியாசங்களை ஏற்படுத்துகின்றன.

பெரும்பாலான மாநிலங்களில் சாலை விபத்துகளுக்கு முக்கிய காரணமாக அதிக வேகம்தான் என்று கண்டறியப்பட்டுள்ளது. கடந்த 2017ம் ஆண்டில் 70% மரணங்கள் வேகம் காரணமாகவும், 67% மரணங்கள் ஓட்டுநர்கள் வேக கட்டுப்பாட்டை மதிக்காத காரணங்களாலும் நிகழ்ந்துள்ளதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

வேகப் பிரச்சினை என்பது பெரிய பிரச்சினையாக இருக்கிறது. இதைக் கட்டுப்படுத்துவது அரசின் பெரிய பிரச்சினையாக இருக்கிறது. எனவேதான், தற்போதைய சட்டத்தில் அதிக வேகத்திற்கான அபராதம் ரூ.500 என்பதிலிருந்து ரூ.5000 என்பதாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

சாலை விதிகளை அமலாக்குவதில் இந்தியாவின் நிலை பலவீனமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வேக கேமராக்கள் மற்றும் வாகனங்களுக்குள் சென்சார் பொருத்துவது உள்ளிட்டவை சிறந்த நிவாரணங்களாக பரிந்துரை செய்யப்படுகின்றன.

அதேசமயம், விதிகளை சிறப்பாக அமல்படுத்துவதால் மட்டுமே முழுமையான தீர்வு கிடைத்துவிடாது. ஐக்கிய நாடுகள் சபையின் பரிந்துரைப்படி, 5 முக்கியமான விஷயங்கள் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியுள்ளது.

சாலைப் பாதுகாப்பு மேலாண்மை திறனை அதிகரித்தல், பாதுகாப்பான உள்கட்டமைப்பை மேம்படுத்துதல், பாதுகாப்பான வாகனங்களை பயன்பாட்டிற்கு கொண்டுவருதல், சாலைகளைப் பயன்படுத்தும் நடைமுறையை சிறப்பாக்குதல் மற்றும் விபத்துக்குப் பிறகான உடனடி நடவடிக்கை செயல்பாடுகளை செம்மைப்படுத்துதல் போன்ற அம்சங்களில் கவனம் செலுத்தப்பட்டால் நாட்டில் சாலைப் பாதுகாப்பு என்ற லட்சியம் அடையப்படும்.