ஹோட்டல்கள், சுற்றுலா தளங்கள் விரைவில் திறக்கப்படுமா?

புதுடெல்லி: ஹோட்டல்களை மீண்டும் திறப்பது மற்றும் சுற்றுலாவை மறுபடியும் தொடங்குவது உள்ளிட்ட நடவடிக்கைகள் தொடர்பாக மாநில அரசுகளிடமிருந்து பெறப்பட்ட முன்மொழிவுகளை மத்திய அரசு பரிசீலித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஐந்தாம் கட்ட ஊரடங்கில், இவைதொடர்பான சாத்திய ஏற்பாட்டை மத்திய அரசு சேர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த மார்ச் 25 முதல் ஹோட்டல்கள் மற்றும் சுற்றுலா தளங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. உள்நாட்டு விமானப் போக்குவரத்து துவக்கப்பட்ட நிலையில், ஹோட்டல்களை திறப்பதுதான் முறையானது என்ற குரல்கள் எழுகின்றன.

கோவா மாநிலத்திற்கு விமானம் ஏறுவதற்கு முன்னதாக, கொரோனா பரிசோதனை மேற்கொள்வது கட்டாயம் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது. ஹோட்டல்கள் பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்றி செயல்பட வேண்டுமென கர்நாடக அரசு விரும்புகிறது என்று அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மத்திய அரசிடமிருந்து ஆலோசனைகளை எதிர்பார்த்துக் காத்திருப்பதாக கேரள அரசின் சார்பில் கூறப்பட்டுள்ளது.