மதிமுகவில் சேர இருக்கிறார் என்று தகவல் வெளியான நிலையில் மீண்டும்  அரசியலுக்கு வரும் எண்ணமே இல்லை என்று நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார்.

தி.மு.க.வில் இருந்து ம.தி.மு.க. உதயமானபோது வைகோவுடன் வந்தவர் நாஞ்சில் சம்பத். சிறந்த பேச்சாளரான இவர் ம.தி.மு.க.வின் கொள்கை பரப்பு செயலாளராக பொறுப்பு வகித்தார். ஒருகட்டத்தில் வைகோவுடன் கருத்து வேற்றுமை ஏற்பட்டு சற்று ஒதுங்கியிருந்தார். இந்த நிலையில் கடந்த 2012ம் ஆண்டு ஜெயலலிதா முன்னிலையில் அ.தி.மு.க.வில் சேர்ந்தார். அவருக்கு கொள்கைபரப்பு செயலாளர் பொறுப்பு அளிக்கப்பட்டது.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அரசியலில் இருந்து ஒதுங்கியிருந்த அவர் பிறகு சசிகலா தரப்பை ஆதரித்தார். சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா சிறை சென்ற பிறகு தீவிரமாக டி.டி.வி. தினகரனை ஆரம்பித்தார். தினகரன் கட்சி ஆரம்பித்தபோது, கட்சிப் பெயரில் திராவிடம், அண்ணா பெயர்கள் இல்லை என்று கூறி அரசியலில் இருந்தே ஒதுங்குவதாக நாஞ்சில் சம்பத் தெரிவித்தார்.

தற்போது இலக்கியக் கூட்டங்களில் கலந்துகொண்டு சொற்பொழிவு ஆற்றி வருகிறார்.  இந்த நிலையில் சென்னையில் நடந்த தமிழறிஞர்கள் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவும், நாஞ்சில் சம்பத்தும் சந்தித்துக்கொண்டனர்.

இதையடுத்து சம்பத் மதிமுகவில் மீண்டும் இணைகிறார் என தகவல்கள் பரவின. இதை நாஞ்சில்சம்பத் மறுத்துள்ளார்.
“தமிழ் இலக்கிய நிகழ்ச்சி ஒன்றில் நானும், ம.தி.மு.க. பொதுச் செயலாளர் அண்ணன் வைகோவும் கலந்து கொண்டோம். இருவரும் இலக்கியம் தொடர்பாக கருத்துரைகள் வழங்கினோம். அப்போது மரியாதை நிமித்தமாக நாங்கள்   கலந்துரையாடினோம். மற்றபடி  அரசியல் எதுவும் பேசவில்லை.
ம.தி.மு.க.வில் மீண்டும் சேரும் எண்ணம் இல்லை. எந்த அரசியல் கட்சியிலும் சேரும் எண்ணம் எனக்கு கிடையாது” என்று நாஞ்சில்சம்பத் தெரிவித்துள்ளார்.