ஒரு தனியார் விளையாட்டுத் தொடரில், சாதாரண லீக் போட்டிகளில் வெற்றியை முடிவுசெய்ய, ஒன்றுக்கு இரண்டு சூப்பர் ஓவர்கள் வைக்கப்படுகையில், 50 ஓவர் உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் அதை ஏன் செய்யவில்லை என்ற கேள்வி எழுந்துள்ளது.
தற்போது ஐபிஎல் 13வது சீசன் அமீரக நாட்டில் நடைபெற்று வருகிறது. இதில், பல லீக் ஆட்டங்கள் சமனில் முடிவடையும் நிலையில், அப்போட்டிகளில் தலா 1 புள்ளியை இரு அணிகளுக்கும் பகிர்ந்தளிக்கும் நடைமுறை பின்பற்றப்படாமல், சூப்பர் ஓவர் பின்பற்றப்படுகிறது.
‍அக்டோபர் 18ம் தேதி நடைபெற்ற கொல்கத்தா – ஐதராபாத் மற்றும் மும்பை – பஞ்சாப் ஆகிய அணிகளுக்கு இடையிலான 2 போட்டிகளுமே சமனில் முடிவடைந்தன. எனவே, இப்போட்டிகளில் வெற்றியை தீர்மானிக்கும் வகையில் சூப்பர் ஓவர் முறை பின்பற்றப்பட்டது. இதில், மும்பை – பஞ்சாப் போட்டிதான் ஹைலைட்!
ஏனெனில், அப்போட்டியில் முதல் சூப்பர் ஓவரும் சமனில் முடிந்துவிட, இரண்டாவது சூப்பர் ஓவர் வைக்கப்பட்டு அதில் பஞ்சாப் அணி வென்றது. ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகளிலேயே(நாக்-அவுட் போட்டி அல்ல) இப்படியான நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது.
ஆனால், கடந்த 2019ம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற 50 ஓவர் உலகக்கோப்பை தொடரின் இறுதியாட்டத்தில் நியூசிலாந்து – இங்கிலாந்து அணிகள் மோதிய ஆட்டம் சமனில் முடிந்தது. எனவே, கோப்பை வெல்லும் அணியை தீர்மானிக்க சூப்பர் ஓவர் முறை வைக்கப்பட்டது. இதுவும் சமனில் முடிய, அதற்கடுத்து கையிலெடுக்கப்பட்ட விதிமுறைதான் சர்ச்சையைக் கிளப்பியது.
அதாவது, பேட்டிங் இன்னிங்ஸில் எந்த அணி அதிக பவுண்டரிகள் அடித்ததோ, அந்த அணிக்கு உலகக் கோப்பையை வழங்குவதென சர்ச்சைக்குரிய முடிவெடுக்கப்பட்டது. இதனடிப்படையில், இங்கிலாந்துக்கு உலகக்கோப்பை சென்றது.
இதேபோன்று, கடந்த 1999ம் ஆண்டு உலகக்கோப்பை தொடரில், தென்னாப்பிரிக்கா – ஆஸ்திரேலியா மோதிய முக்கியமான அரையிறுதி ஆட்டம் சமனில் முடிவடைய, இரு அணிகளும் மோதிய முந்தைய லீக் போட்டியில் ஆஸ்திரேலியா வென்றதால், சூப்பர் ஓவர் போன்ற நடைமுறைகள் கடைபிடிக்கப்படாமலேயே இறுதிப்போட்டிக்கு ஆஸ்திரேலியா தகுதிபெற்றதாக அறிவிக்கப்பட்டது.
உலகக்கோப்பை போன்ற மிக முக்கியமான தொடர்களில் மொக்கையான மற்றும் மோசமான விதிமுறைகளை வைத்துக்கொண்டிருக்கும் நிலையில், ஐபிஎல் போன்ற ஒரு சாதாரண தனியார் கிரிக்கெட் தொடரில், அணிகளுக்கான சரியான நீதி வழங்கப்படுவது கவனத்தை ஈர்த்துள்ளது. எனவே, இதைப்பார்த்தாவது ஐசிசி அமைப்பு தன்னை திருத்திக்கொள்ள வேண்டுமென்ற குரல்கள் வலுவாக எழுந்துள்ளன.