மசூத் அசாரை ஒப்படைப்பாரா இம்ரான் கான்?: வெளியுறவு அமைச்சர் சுஷ்மா

புதுடெல்லி: பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், பெருந்தன்மையுள்ள அரசியல்வாதி என்றால், தீவிரவாதி மசூத் அசாரை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்று வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறியதாவது, “‍ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத முகாம்கள் மீது குறிவைத்து, இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியதற்கு, பாகிஸ்தான் ராணுவம் எதற்காக பதிலடி கொடுக்க வேண்டும்?

தீவிரவாதிகளின் சார்பாக பாகிஸ்தான் ராணுவம் எதற்காக எங்களைத் தாக்க வேண்டும்? அவர்கள், அந்த பயங்கரவாத இயக்கத்தினரை தங்கள் நாட்டில் பாதுகாத்து வைத்திருப்பதோடு, அந்த இயக்கத்திற்கு நிதியுதவி செய்து, அவர்கள் சார்பாக பதிலடி கொடுக்கவும் செய்கிறார்கள்.

பாகிஸ்தான் பிரதமர் உண்மையிலேயே பெருந்தன்மையானவர் என்றால், மசூத் அசாரை எங்களிடம் ஒப்படைக்க வேண்டும்” என்றார்.

– மதுரை மாயாண்டி