ஆஸி.,யில் துவங்கும் பெண்கள் டி20 உலகக்கோப்பை – சாதிக்குமா இளம் இந்திய அணி?

மெல்போர்ன்: பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பெண்கள் உலகக்கோப்பை டி-20 தொடர் ஆஸ்திரேலியாவில் பிப்ரவரி 21ம் தேதி(நாளை மறுநாள்) துவங்குகிறது.

இத்தொடரில், இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட மொத்தம் 10 அணிகள் கலந்துகொள்கின்றன. இவை ‘எ’ மற்றும் ‘பி’ என்று 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு பிரிவிலும் தலா 5 அணிகள் இடம்பெற்றுள்ளன.

இந்தியா ‘ஏ’ பிரிவில் இடம்பெற்றுள்ளது. இப்பிரிவில் இடம்பெற்றுள்ள மற்ற அணிகள் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இலங்கை மற்றும் வங்கதேசம். இந்திய அணி, முதல் நாளில், தனது முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. இப்போட்டி சிட்னியில் நடைபெறுகிறது.

பெண்கள் உலகக்கோப்பையில் இந்திய அணி இதுவரை 3 முறை அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. இத்தொடரில், இந்திய அணி இளமையான ஒரு அணியாக களமிறங்குகிறது. அணியின் சராசரி வயது 23 என்பதாக உள்ளது.

“மொத்தம் 4 முறை சாம்பியன் பட்டம் வென்ற ஆஸ்திரேலியாவை முதல் போட்டியில் சந்திப்பது குறித்து எந்த தடுமாற்றமும் இல்லை. நேர்மறை எண்ணத்துடன் இருப்பதால், யாருக்கும் நெருக்கடி கொடுக்கும் நிலையிலேயே இருக்கிறோம்” என்றார் இந்தியக் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர்.