இந்தியா – ஆஸ்திரேலியா கிரிக்கெட் தொடர் நடக்குமா? – பிசிசிஐ சொல்வது என்ன?

--

மும்பை: இந்தியா – ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடர் திட்மிட்டபடி நடைபெறும் என்றும், அதன்பொருட்டு வீரர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளவும் தயார் என்று பிசிசிஐ அமைப்பின் பொருளாளர் அருண் துமால் தெரிவித்துள்ளார்.

இந்திய – ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான மூன்று வகை கிரிக்கெட் போட்டிகள் அடங்கிய தொடர், இந்தாண்டு அக்டோபர் மாதம் திட்டமிடப்பட்டுள்ளது. இதுநாள் வரை இத்தொடர் ஒத்திவைக்கப்படவில்லை என்றாலும்கூட, கொரோனா பரவலின் தீவிரம் காரணமாக, திட்டமிட்டபடி நடைபெறுமா? என்ற சந்தேகம் இன்னும் நிலவுகிறது.

இதுகுறித்து பிசிசிஐ பொருளாளர் அருண் துமால் கூறியதாவது, “எதிர்கால சூழல் எப்படி இருக்குமென்று தெரியாது. ஆனால், இப்போதுவரை எந்த சிக்கலும் இல்லை. போட்டிகள் தொடங்குவதற்கு முன்னதாக, வீரர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டுமென வலியுறுத்தப்பட்டாலும், அதனைப் பின்பற்ற தயார்.

ஆனால், ஒவ்வொரு தொடருக்கு முன்னதாகவும் அதை செய்ய வேண்டுமானால் சாத்தியமில்லை. இத்தொடர் ரத்தானால், கிரிக்கெட் ஆஸ்திரேலியா சுமார் ரூ.1480 கோடி நஷ்டத்தை சந்திக்க வேண்டியிருக்கும்.
எனவே, எப்படியேனும் தொடரை நடத்துவது குறித்தும், பின்பற்றபட வேண்டிய நடைமுறைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது” என்றார் அவர்.

முத்தரப்பு டி-20, 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் மற்றும் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் ஆகியவற்றில் ஆஸ்திரேலிய மண்ணில் விளையாடுகிறது இந்திய அணி.