மொஹாலி: இந்தியா – தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையே நடைபெறும் இரண்டாவது டி-20 போட்டியில் தென்னாப்பிரிக்கா நிர்ணயித்த 150 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிவருகிறது இந்திய அணி.

இமாச்சலப் பிரதேசம் தர்மசாலாவில் நடைபெற வேண்டிய முதல் போட்டி மழையால் ரத்தாகிவிட, தற்போது இரண்டாவது போட்டி பஞ்சாப் மாநிலம் மொஹாலியில் நடந்து வருகிறது.

இப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்துவீச முடிவு செய்தது. இதன்படி களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணியில் டி காக்(52) மற்றும் டெம்பா பவுமா(49) ஆகியோர் தவிர ஏனையோர் யாரும் சொல்லிக்கொள்ளும்படியான பங்களிப்பை வழங்கவில்லை.

டேவிட் மில்லர் 18 ரன்களும், பிரிடோரியஸ் 10 ரன்களும் அடித்தனர். முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து, 20 ஓவர்கள் ஆடிய அந்த அணி எடுத்த ரன்கள் 149 மட்டுமே.

இந்தியா தரப்பில் தீபக் சஹார் 2 விக்கெட்டுகளும், நவ்தீப் சைனி, ஜடேஜா மற்றும் ஹர்திக் பாண்ட்யா ஆகியோர் தலா 1 விக்கெட் கைப்பற்றினர்.

எட்டக்கூடிய இலக்கை விரட்டிவரும் இந்திய அணி, 2 விக்கெட்டுகளை இழந்து 12 ஓவர்களில் 96 ரன்களை எடுத்துள்ளது. ரோகித் ஷர்மா 12 ரன்களுக்கு நடையைக் கட்டிவிட, தவானும் கேப்டன் கோலியும் நிலைத்து நின்றனர்.

31 பந்துகளில் 40 ரன்களை அடித்த தவான் அதோடு திருப்தியடைந்து வெளியேறினார். விராத் கோலி 37 ரன்களுடன் களத்தில் உள்ளார். அவருடன் ரிஷப் பண்ட் இணைந்துள்ளார்.