இந்திய விமானப் போக்குவரத்தில் சலுகை கட்டணங்கள் அமலாகுமா?

புதுடெல்லி: இந்திய விமான நிறுவனங்கள் ‘ஜீரோ பேக்கேஜ் கட்டணங்கள்’ எனப்படும் ஒரு சலுகையை பயணிகளுக்கு வழங்குவதற்கு அனுமதிக்கப்பட்டால், அதன்மூலம் ஆண்டு வருவாயில் 400 மில்லியன் அமெரிக்க டாலர்கள் அதிகரிக்கும் என்று கூறியுள்ளது ஆலோசனை அமைப்பான சிஏபிஏ.

இந்த சலுகை அறிவிக்கப்பட்டால், செக்-இன் செய்ய தேவையில்லாத சிறிய பையை மட்டுமே கையில் கொண்டுவரும் பயணிகள், குறைந்தக் கட்டணத்தில் பயணம் செய்ய வழியேற்படும்.

‘ஜீரோ பேக்கேஜ் கட்டணம்’ என்பது, செக்-இன் செய்ய வேண்டிய பெரிய சுமைகளைக் கொண்டு வராமல், சிறியளவு கைப்பையை மட்டுமே கொண்டுவரும் பயணிகளுக்கு சில சலுகைகளை அளிப்பதாகும்.

இந்திய விமானப் போக்குவரத்தில், துணைநிலை வருவாய்கள் பெருகாமல் போனதற்கு, இங்குள்ள பல விதிமுறைகளே காரணம் என்று கூறப்படுகிறது. ஜீரோ பேக்கேஜ் கட்டணங்கள் அறிவிக்கப்படாமல் இருப்பதே இதற்கான ஒரு உதாரணமாக கூறப்படுகிறது.

கடந்த மே மாதம் 25ம் தேதி, இந்தியாவில் உள்நாட்டு விமானப் போக்குவரத்து அனுமதி வழங்கப்பட்டது. அப்போது, கட்டண நிர்ணயிப்பிற்கான விதிமுறைகள் வழங்கப்பட்டு, அதன் அடிப்படையிலேயே விமான நிறுவனங்கள் கட்டணம் நிர்ணயிக்க வேண்டுமென உத்தரவிடப்பட்டது.