ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை, மிகவும் ஆச்சர்யமூட்டும் வகையில், தன் தலைமையில் வென்று கொடுத்துள்ளார் இந்தியாவின் தற்காலிக டெஸ்ட் கேப்டன் அஜின்கியா ரஹானே.

‍அதேசமயம், விராத் கோலி கேப்டன் பொறுப்பு வகித்த முதல் டெஸ்ட் போட்டியில், இந்திய அணி அவமானகரமான முறையில் தோற்றது. ஆனால், மிகவும் டேமேஜான ஒரு வண்டியை வைத்துக்கொண்டே, அதன் இலக்கிற்கு வெற்றிகரமாக ஓட்டிச்சென்றுவிட்டார் ரஹானே.

டி-20 போட்டிகளைப் பொறுத்தவரை, ரோகித் ஷர்மா சிறப்பாக செயல்பட்டு வருகிறார். எனவே, ஒவ்வொரு வகை கிரிக்கெட்டிற்கும், ஒவ்வொரு தனி கேப்டன் என்ற நடைமுறையை இந்தியக் கிரிக்கெட்டிலும் நடைமுறைப்படுத்த வேண்டுமென்ற குரல்கள் ஒலிப்பதும், அதற்கு இந்தியளவில் ஆதரவும் எதிர்ப்பும் எழுவதும், பின்னர் அந்த விஷயம் அப்படியே அமுங்கி விடுவதும் வாடிக்கையாக உள்ளது.

இந்திய கிரிக்கெட் நிர்வாகத்தைப் பொறுத்தவரை, தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, அணி தேர்வாளர் பிரசாத் மற்றும் கேப்டன் விராத் கோலி ஆகியோர் அரசியல் செய்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு உண்டு. இவர்கள், வெற்றியைவிட, அரசியலுக்கே முக்கியத்துவம் அளிப்பவர்கள் என்ற குற்றச்சாட்டு வலுவாக  உண்டு. இந்த அரசியல் காரணமாகத்தான், 2019 உலகக்கோப்பை அரையிறுதிப் போட்டியில், நியூசிலாந்திடம் தோற்று, இந்திய அணி வெளியேறியது என்றும் கூறப்படுவதுண்டு.

தற்போதைய ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர், கேப்டன்சி பிரச்சினைக்கு மீண்டும் உயிர்கொடுத்துள்ளது.

அந்தவகையில், ஒருநாள் போட்டிக்கு விராத் கோலியையும், டெஸ்ட் போட்டிக்கு அஜின்கியா ரஹானேவையும், டி-20 போட்டிக்கு ரோகித் ஷர்மாவையும் கேப்டனாக நியமித்தால், இந்திய அணி வெற்றிப்பா‍தையில் பயணிக்கும் என்ற குரல்கள் ஓங்கி ஒலிக்கின்றன.