புபனேஷ்வர்: 2020ம் ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக் ஹாக்கி போட்டிகளுக்கு தகுதிபெறும் ஒரு கட்டமாக, இந்திய ஆண்கள் ஹாக்கி அணி, ரஷ்ய அணியை எதிர்கொள்கிறது.

இதேபோன்று, இந்திய பெண்கள் ஹாக்கி அணி, அமெரிக்க அணியை எதிர்கொள்கிறது.

தற்போதைய நிலையில் தரவரிசைப் பட்டியலில் உலகளவில் இந்திய அணி 5வது இடத்திலும், ரஷ்ய அணி 22வது இடத்திலும் உள்ளன. இப்போட்டி நவம்பர் மாத துவக்கத்தில் ஒடிசாவின் புபனேஷ்வரில் நடக்கவுள்ளது.

ஏற்கனவே நடந்த ஹாக்கி சீரிஸ் ஃபைனல்ஸ் தொடரில் இந்திய அணி, ரஷ்யாவை பெரிய வித்தியாசத்தில் வென்றிருப்பதால், தகுதிபெறும் போட்டியிலும் வென்றுவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோன்று, உலக தரவரிசையில் 9வது இடத்திலுள்ள இந்திய பெண்கள் ஹாக்கி அணி, 13வது இடத்திலுள்ள அமெரிக்காவை எதிர்கொள்கிறது.

ஆண்கள் ஹாக்கிப் பிரிவில் ஜப்பான், ஆஸ்திரேலியா, பெல்ஜியம், தென்னாப்பிரிக்கா மற்றும் அர்ஜெண்டினா ஆகிய அணிகளும், பெண்கள் ஹாக்கிப் பிரிவில் ஜப்பான், அர்ஜெண்டினா, நெதர்லாந்து, தென்னாப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகளும் ஏற்கனவே ஒலிம்பிக்கில் பங்கேற்க தகுதிபெற்றுவிட்டன.