கடந்த 2011ம் ஆண்டு 50 ஓவர் உலகக்கோப்பையை இந்திய அணி வென்று, 10 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள சூழலில், அதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள கெளதம் கம்பீர், இந்திய கிரிக்கெட்டில் தனிமனித துதிபாடலை சாடியுள்ளதோடு, அணி என்று வரும்போது, எந்த தனிமனிதரும் பெரிய ஆள் இல்லை என்றும், அனைவரின் கூட்டு முயற்சிதான் அணியின் வெற்றி என்றும் சிறப்புக்குரிய கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார்.

பொதுவாக, இந்திய அரசியல் மற்றும் சமூக வழக்கத்தில், தனிமனித துதிபாடல் என்பது ஒரு வழமையாகிவிட்ட, வாழையடி வாழையான அம்சம்! அது, இந்திய விளையாட்டுத் துறையிலும் தொடர்வது ஒருவகையில் ஆச்சர்யமில்லைதான். நீண்டகாலமாகவே இந்தியக் கிரிக்கெட்டில் தனிமனித துதிபாடல் உண்டு.

நவீன காலத்தில், இந்திய கிரிக்கெட்டின் கடவுளாக கருதப்பட்டார் சச்சின். இந்திய அணிக்கான அச்சாக அவரே சுழன்றார். அந்த காலத்தில், இந்திய கிரிக்கெட் நிர்வாகம் மற்றும் அணியின் உளவியல் மிகவும் பலவீனமானதாக இருந்தது.

பின்னாளில், நிலைமையை செளரவ் கங்குலி, தனது தலைமையின்கீழ் மாற்ற முயன்று, ஓரளவு வெற்றியும் கண்டார். அவர் முயன்ற ஒரு அணி கட்டமைப்பை செம்மையாக கையாண்டு, மகேந்திர சிங் தோனி, பல விஷயங்களை சாதித்தார். ஆனால், அவர் காலத்திலும் தனிமனித துதிபாடல் தொடர்ந்தது. அந்த துதிபாடலின் நாயகன் வேறுயாருமல்ல; சாட்சாத், அவரேதான்! ஏதோ, தோனி மைதானத்திற்குள் இறங்கிவிட்டாலே, அணிக்கு கோப்பை உறுதி என்ற அளவிற்கு நம்பிக்கை வளர்ந்தது. அந்த நம்பிக்கையை மீடியாக்கள் நன்றாகவே ஊதி எரிய வைத்தன. இந்திய அணிக்கு இந்த தோனி புராணம் பலவீனத்தையே ஏற்படுத்தியது.

பின்னர், விராத் கோலி புராணமும் ஒரு கட்டத்தில் எழுந்து, தொடர்ந்து கொண்டிருந்தது. விராத் கோலியும் பல விஷயங்களில் சறுக்கத் தொடங்கினார். நிலைமை இப்படியிருக்கையில், இந்திய அணியின் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம், குறிப்பாக டெஸ்ட் தொடர், அனைத்தையும் ஓரளவு மாற்றிவிட்டுள்ளது என்றே கூறலாம்!

யாருமே எதிர்பாராத வகையில், பேட்டிங்கில் பெரியளவு திறமையில்லாத ரஹானே, கேப்டன்சியில் பிரமாதமாக செயல்பாட்டார். ஷப்மன் கில், ரிஷப் பன்ட், வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாகுர், முகமது சிராஜ், நடராஜன், அனுமன் விஹாரி என்று, அதுவரை அதிகம் அறிந்திராத ஒரு பட்டாளமே பட்டையைக் கிளப்பியது.

அந்த உளவியல், இங்கிலாந்துக்கு எதிரான தொடர்களிலும் தொடர்ந்தது எனலாம். ஆனால், இப்போதும் புதிய பிரச்சினை முளைக்கத்தான் செய்கிறது. சமீப நாட்களில், ரிஷப் பன்ட் மீதான தனிமனித துதிபாடல் மிகவும் அதிகரித்துள்ளது. இது ரிஷப் பன்ட்டிற்கு மட்டுமல்ல; இந்திய அணிக்கும் நல்லதல்ல.

எனவே, கெளதம் கம்பீரின் கருத்து சிறப்பாக எடுத்துக்கொள்ளப்பட்டு, ஆழமாக சிந்திக்கப்பட்டு, இந்திய அணியை ஒரு அணியாக மட்டுமே கருதி, தனிமனித துதிபாடலை இந்த மீடியாக்களும், தீவிர ரசிகர்களும் விட்டொழித்தால், இந்திய கிரிக்கெட் அனைவரும் எப்போதும் ரசிக்கும்படி வரும் நாட்களில் சிறப்பாக நடைபோடும்..!